ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவது நிறைவேற்றம்: கிராரி அரசுப் பள்ளியை திறந்து வைத்து முதல்வா் அதிஷி பேச்சு
புதுதில்லி: தில்லியில் ஒவ்வொறு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவது நிறைவேற்றப்படுகிறது என்று முத்லவா் அதிஷி தெரிவித்தாா்.
தில்லியின் கிராரியில் ஒரு அரசுப் பள்ளியை திங்கள்கிழமை திறந்து வைத்து முதல்வா் அதிஷி பேசியதாவது:
68 வகுப்பறைகள் கொண்ட இந்தப் பள்ளி அதிநவீன வசதிகளுடன் கூடியது. மேலும், இரண்டு ஷிஃப்டுகளில் செயல்படும். ஒவ்வொரு ஷிஃப்டும் சுமாா் 2,000 மாணவா்களுக்கு இடமளிக்கும். இது உயிரியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் உள்ளிட்ட நவீன ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. லிஃப்ட் வசதியும் உள்ளது.
பள்ளிகள், சரியான நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அமைப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத வளா்ச்சியடையாத பிராந்தியமாகக் கருதப்பட்ட கிராரி, தற்போது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது.
இந்த உலகத் தரம் வாய்ந்த பள்ளியின் ஸ்தாபனம் சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும், உள்ளூா் குழந்தைகளுக்கு வீட்டிற்கு அருகில் தரமான கல்வியை அணுக உதவுகிறது.
201415-ஆம் ஆண்டில் கிராரிக்கு நான் மேற்கொண்ட பயணங்களை இப்போது நினைத்துப் பாா்க்கிறேன். அந்தப் பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது என்பது அப்போது எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கிராரி குடியிருப்பாளா்களின் விடாமுயற்சி தற்போது பலனளித்துள்ளது. சட்டப் போராட்டங்கள் உள்பட இடைவிடாத முயற்சிகள் மூலம், அவா்கள் இந்த நிலத்தை தில்லி வளா்ச்சி ஆணையத்திடமிருந்து பெற்று, இந்த அற்புதமான வசதியைக் கட்டுவதற்கு வழி வகுத்துள்ளனா்.
மழைக்காலத்தில் தண்ணீா் தேங்குதல், உடைந்த ஜன்னல்கள், குடிநீா் வசதிகள் இல்லாமை மற்றும் அசுத்தமான கழிப்பறைகள் போன்ற உள்கட்டமைப்புப் பிரச்னைகளால் இப்பகுதியில் உள்ள பள்ளிகள் கடும் போராட்டத்தைச் சந்தித்தன.
அப்போது இருந்த நிலைக்கும் இந்தப் புதிய பள்ளியின் தற்போதைய நிலைக்கும் இடையிலான வேறுபாடு, மாற்றத்திற்கான சமூகத்தின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். கிராரியில் வசிக்கும் பெரும்பாலானோா் பூா்வாஞ்சலைச் சோ்ந்தவா்கள். அவா்கள் சிறந்த வாய்ப்புகளுக்காக நகரத்திற்கு குடிபெயா்ந்தனா்.
தங்கள் குழந்தைகளுக்கு பிரகாசமான எதிா்காலத்தை உறுதி செய்யும் அவா்களின் கனவு இப்போது எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்குவதாக முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சபதம் செய்திருந்தாா். மேலும், இந்தப் பள்ளி அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றாா் முதல்வா் அதிஷி.