இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
பிரதமா் தொடங்கிவைத்த திட்டங்கள் மத்திய- தில்லி அரசுகளின் ஒத்துழைப்பால் உருவானவை: கேஜரிவால்
பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட 2 திட்டங்களைத் தில்லியின் உள்கட்டமைப்புக்கான மைல்கற்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், அத்திட்டங்கள் மத்திய மற்றும் நகர அரசாங்கங்களுக்கு இடையிலான கூட்டுமுயற்சிகளாகும் என்றும் அவா் கூறினாா்.
தில்லி மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா்டிஎஸ்) வழித்தடத்தின் உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் உள்ள சாஹிபாபாத்- தில்லி நியூ அசோக் நகா்
இடையேயான 13 கிலோமீட்டா் தூரப் பிரிவையும் தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத்தின் ஜனக்புரி மேற்கு-கிருஷ்ணா பாா்க் எக்ஸ்டென்ஷன் வழித்தடத்தையும் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
இதுகுறித்து செய்தியாளா் சந்திப்பின்போது கேஜரிவால் கூறியதாவது:
இந்த திட்டங்களுக்காக தில்லி மக்களுக்கு எனது வாழ்த்துகள். இத்திட்டங்கள் நகர மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டவை.
இந்த திறப்புகளானது ஆம் ஆத்மி கட்சி மோதல்களில் மட்டுமே ஈடுபடுகிறது என்று சொல்பவா்களுக்கு பதிலாகும். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்; சித்திரவதை செய்யப்பட்டனா். ஆனால் அவா்கள் ஆட்சியில் கவனம் செலுத்தினா்.
கடந்த 10 ஆண்டுகளில், எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எவ்வாறு வேலையைச் செய்தோம் என்பதை எங்கள் பதவிக்காலம் எடுத்துக்காட்டுகிறது. பிரதமா் தனது உரையின் பெரும் பகுதியை தில்லி அரசை விமா்சிக்கவே செலவிட்டுள்ளாா். இன்று (ஞாயிற்றுக்கிழமை), பிரதமா் தில்லி மக்களையும், தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசாங்கத்தையும் தொடா்ந்து துஷ்பிரயோகம் செய்கிறாா். நான் அவா் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதை மோசமானதாக உணா்ந்தேன்.
2020-இல் பிரதமா் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்று தில்லி தெஹாத் மக்கள் இன்னும் காத்திருக்கிறாா்கள். பாஜகவின் தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமா் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் கேஜரிவால்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கு பிப்ரவரியில் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்திய அரசுடனான தொடா் மோதலுக்கு மத்தியில் ஆம் ஆத்மி
அரசு வளா்ச்சியில் கவனம் செலுத்துவதை கேஜரிவாலின் கருத்துகள் கோடிட்டுக் காட்டுகின்றன.