மகா கும்பமேளா: நேபாளம், உத்தரகண்டில் இருந்து வரும் பூஜை பொருள்கள்!
உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நடைபெறுவதையொட்டி, மக்களின் தேவையை அறிந்து பல்வேறு பகுதிகளிலிருந்து பூஜைப் பொருள்கள் பிரயாக்ராஜுக்கு கொண்டுவரப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. உலகிலேயே மிகப்பெரிய மத வழிபாடான மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு இந்தாண்டு நாடு முழுவதுமிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வருகையையடுத்து, நதிகள் மற்றும் பல்வேறு நீர்நிலைகள் தூய்மை செய்யப்படுகின்றன. சாலைகளை விரிவுபடுத்துதல், மலைப்பாதைகளைச் சமன் செய்தல், மின்விளக்கும் வசதிகளை ஏற்படுத்துதல், மேலும், பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், கூடாரங்கள், கழிப்பறைகள், குடிநீர் இணைப்புகள், சுகாதார வசதிகள் செய்யப்படுகின்றன. ஆங்காங்கே உணவகங்கள் அமைக்கப்படுகின்றன. படித்துறை பகுதிகள் சுத்தம் செய்யப்படுகின்றது.
சங்கமம் நகரில் மகா கும்பமேளா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் நேபாளம், வாரணாசி மற்றும் மதுரா-பிருந்தாவனம் ஆகிய பகுதிகளிலிருந்து
பூஜைப் பொருள்கள், பஞ்சாங்கம், ருத்ராக்ஷ மாலைகள், துளசி மாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மதப் பொருள்கள் விற்பனைக்காக பிரயாக்ராஜ் கொண்டுவந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி, நகரை அழகாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக ரூ.6,800 கோடியை உ.பி. அரசு ஒதுக்கியிருக்கிறது. கடந்த 2019 மகா கும்பமேளாவில் 24 கோடி பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். வரும் 2025 மகா கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.