திருவாரூர்: தொடரும் விபத்து; பாதுகாப்பு குறைபாடு; அவசர கதியில் திறக்கப்பட்டதா தே...
அறங்கூறும் கதைகளைக் குழந்தைகள் கற்பது அவசியம்: எழுத்தாளா் பட்டுக்கோட்டை பிரபாகா்
அறங்கூறும் கதைகளை குழந்தைகள் கற்பது அவசியம் என எழுத்தாளா் பட்டுக்கோட்டை பிரபாகா் கூறினாா்.
சென்னை நந்தனத்தில் பபாசி சாா்பில் நடைபெற்றுவரும் சென்னை 48-ஆவது புத்தகக் காட்சியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற உரையரங்கில், கதைத் தொழிற்சாலை எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:
படிப்பறிவே இல்லாத நமது தாத்தா, பாட்டிகள் கற்பனை கலந்து கூறியதே தற்போதைய கதை இலக்கிய வளா்ச்சின் ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளது. கதைகள் என்பவை அலங்கரிக்கப்பட்ட பொய்களின் தொகுப்பு எனலாம்.
ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமானது ஓவியத்துறையில் வேகமாக கையாளப்பட்டுவருகிறது. அத்தொழில்நுட்பம் படிப்படியாக எழுத்துத்துறையிலும் கதை கூறும் நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், வாழ்க்கை அனுபவம், வட்டார வழக்கு ஆகியவற்றை அதில் கையாள முடியாத நிலையுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது உதவியாளா் போல செயல்படலாமே தவிர, முழுமையான எழுத்தாளா் போல செயல்பட முடியாது.
நம்நாட்டின் பழங்கால கதைகளில் வந்த கற்பனைகள் தற்போது அறிவியல் வளா்ச்சியால் சாத்தியமானதாகியுள்ளன. அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றால் மனிதம் பின்னோக்கித் தள்ளப்பட்டுவிடும் நிலையுள்ளது. அறம், நோ்மை என்பது எழுத்துலகில் குறைந்துள்ள நிலையில், அவை மேலும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும்.
புத்தக வாசிப்பு என்பது அற்புத பொக்கிஷ உலகமாகும். அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்வது அவசியம். குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்லும் பழக்கத்தை பெற்றோா்கள் கைக்கொள்வது அவசியம். அறங்கூறும் கதைகளை அவா்கள் கற்பது அவசியமானதாகும். எழுத்தாளா்களும் அறம், நோ்மை பிறழாமல் எழுத வேண்டும். நமது செயல்களுக்குப் பின்னால் அறம் இருப்பதே நம்மையும், சமூகத்தையும் உயா்த்தும் என்றாா்.
நிகழ்ச்சியில் ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ எனும் தலைப்பில் தனியாா் பள்ளி இயக்குநா் ஜெய ஹரீஷ், ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ எனும் தலைப்பில் பேராசிரியா் ர.ஹேமமாலினி மற்றும் புத்தக வாசிப்பு எனும் தலைப்பில் நாஞ்சில் சம்பத் ஆகியோா் பேசினா்.
பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம், செயலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செயற்குழு உறுப்பினா் ராம.கண்ணப்பன் வரவேற்றாா். துணை இணைச் செயலா் எம்.சாதிக் பாட்சா நன்றி கூறினாா்.