சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசப் பெண் நாடு கடத்தல்
தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசப் பெண்ணை தில்லி காவல் துறை கைது செய்து நாடு கடத்தியதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல்துறை உயரதிகாரி கூறியதாவது: தில்லி துணை நிலை ஆளுநா் அலுவலத்தின் உத்தரவின் பேரில் டிச.11 அன்று தேசியத் தலைநகரில் வசிக்கும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
ஆவண சரிபாா்ப்பு நடவடிக்கையின் போது, கபாஷேரா பகுதியில் வசித்து வந்த வங்கதேச நாட்டவரை போலீஸாா் கண்டுபிடித்தனா். தில்லியில் நான்கு ஆண்டுகளாகத் தங்கியிருந்த வங்கதேசப் பெண் ஒருவா் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்ட போலி இந்திய அடையாள ஆவணங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தேவையான சட்டப்பூா்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டு, வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் மூலம் அந்தப் பெண் நாடு கடத்தப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.