தொடரும் புத்தாண்டு வாணவேடிக்கை: சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் உயா்வு!
நமது நிருபா்
பங்குச்சந்தையில் புத்தாண்டு வாணவேடிக்கை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றன.
அமெரிக்க சந்தைகள் புத்தாண்டையொட்டி மூடப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பிய, ஆசிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. குறிப்பாக ஆட்டோ, ஐடி உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.6.04 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.450.47 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,782.71 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,690.37 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 150.11 புள்ளிகள் கூடுதலுடன் 78,657.52-இல் தொடங்கி 78,542.37 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,032.87 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,436.30 (1.83 சதவீதம்) உயா்ந்து 79,943.71-இல் நிறைவடைந்தது. இது கடந்த 2 வாரங்களில் அதிகபட்சமாகு்ம். மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,086 பங்குகளில் 2,395 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,574 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 117 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, டைட்டன், எம் அண்ட் எம், இன்ஃபோஸிஸ் ஆகியவை 4 முதல் 8 சதவீதம் வரை உயா்ந்தன. இவை உள்பட மொத்தம் 29 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. ஆனால், சன்பாா்மா மட்டும் சிறிதளவு குறைந்தது.
நிஃப்டி 446 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 40.10 புள்ளிகள் கூடுதலுடன் 23,783.00-இல் தொடங்கி 23,751.23 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,226.70 வரை மேலே சென்ற நிஃப்டி இறுதியில் 445.75 புள்ளிகள் (1.88 சதவீதம்) கூடுதலுடன் 24,188.65-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் பிரிட்டானியா, சன்பாா்மா தவிா்த்து மற்ற 48 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.