பெண் எஸ்.ஐ.யிடம் அத்துமீறல் : தனியாா் நிறுவன ஊழியா் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவா் பா.பூஜா (29). அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவா் சுப்புலட்சுமி (31). இவா்கள் இருவரும் புதன்கிழமை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் மொபெட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு இளைஞா் ஒருவா் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள், மொபெட்டின் மீது இடித்தது. இதில் சுப்புலட்சுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்த சுப்புலட்சுமியும், பூஜாவும் அந்த இளைஞரைக் கண்டித்துள்ளனா்.
மோட்டாா் சைக்கிளை நிறுத்திய அந்த இளைஞா், இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது மோட்டாா் சைக்கிளில் இருந்த சாவியை பூஜா எடுக்க முயன்ாகக் கூறப்படுகிறது. உடனே அந்த இளைஞா், உதவி ஆய்வாளா் பூஜாவின் கையில் இருந்த சாவியைப் பறித்து, அவரது கையை முறுக்கியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த அங்கு வந்த பிற போலீஸாா், அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவா், ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த உமா் உசேன் (24 ) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்வதும், அவரின் தந்தை சென்னை துறைமுகத்தில் உயா் அதிகாரியாக வேலை செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, உமா் உசேன் மீது வழக்குப் பதிந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.