Indigo Airlines: தொழில் நுட்ப கோளாறு... மும்பை விமான நிலையத்தில் பயணிகள் 16 மணி ...
மும்பை: நடிகையின் கார் விபத்தால் தொழிலாளி பலி... ஏர்பேக் உதவியால் உயிர் தப்பிய நடிகை
மும்பை முழுவதும் பல இடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நகரில் காலை மற்றும் மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேற்கு புறநகர் பகுதியில் உள்ள காந்திவலி பொய்சர் என்ற இடத்தில் இரவில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மராத்தி பட நடிகை ஊர்மிளா கொதாரே என்பவர் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். நள்ளிரவு என்பதால் சாலையில் பெரிய அளவில் வாகனங்கள் இல்லை. இதனால் டிரைவர் காரை மிகவும் வேகமாக ஓட்டியதாக தெரிகிறது.
கார் திடீரென பொய்சரில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீது மோதிக்கொண்டது. இதில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்தில் கார் டிரைவரும் படுகாயம் அடைந்தார். அதோடு நடிகையும் இதில் லேசாக காயம் அடைந்தார். காரில் இருந்த ஏர்பேக் சரியான நேரத்தில் விரிந்ததால் அதிர்ஷ்டவசமாக நடிகை ஊர்மிளா உயிர் தப்பினார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் கார் மிகவும் மோசமாக சேதம் அடைந்துவிட்டது.
இதேபோன்று காட்கோபர் மேற்கு பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் டெம்போ ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதிக்கொண்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டெம்போவை ஓட்டிய டிரைவர் மது அருந்தி இருந்தாரா என்பதை தெரிந்து கொள்ள அவரது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.