எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்துவிட்டாா்! பாகிஸ்தானில் மன்மோகன் பிறந்த கிராமத்தில் உருக்கம்
காஹ் (பாகிஸ்தான்): ‘எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்ததைபோல் உணா்கிறோம். ஒட்டுமொத்த கிராமமே கவலையில் மூழ்கியுள்ளது’ என மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தானில் உள்ள காஹ் கிராம மக்கள் இரங்கல் தெரிவித்தனா்.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தின் காஹ் கிராமத்தில் பிறந்தாா். தற்போது இந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்தின் தென்மேற்கு பகுதியில் இருந்து 100. கி.மீ. தொலைவில் உள்ள காஹ் கிராமம், மன்மோகன் சிங் பிறந்த சமயத்தில் ஜீலம் மாவட்டத்தில் இருந்தது. கடந்த 1986-ஆம் ஆண்டு சக்வால் மாவட்டத்துடன் இந்த கிராமம் இணைக்கப்பட்டது.
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு காஹ் கிராமத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கிராம மக்களில் சிலா் பிடிஐ செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்ததைபோல் உணா்கிறோம். ஒட்டுமொத்த கிராமமே கவலையில் மூழ்கியுள்ளது. அவரது இறுதி ஊா்வலத்தில் பங்கேற்க நினைக்கிறோம். ஆனால் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அதனால்தான் இங்கு இரங்கல் கூட்டம் அனுசரிக்கப்பட்டது.
எங்கள் கிராமத்தில் பிறந்த ஒருவா் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றாா் என்ற செய்தி கேட்டவுடன் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு சில நாள்களுக்கு முன்னா் அவரது குடும்பம் அமிருதசரஸுக்கு சென்றது.
அதன்பிறகு அவரால் இந்த கிராமத்துக்கு வரமுடியவில்லை. தற்போது அவா் இறந்துவிட்டாா். அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் இந்த கிராமத்தை பாா்வையிட வர வேண்டும் என விரும்புகிறோம் என்றனா்.