`வனப்பகுதியில் நின்ற காரில் ரூ.11 கோடி பணம், 52 கிலோ தங்கம்’ - கான்ஸ்டபிள் பில்டர் ஆனது எப்படி?
மத்திய பிரதேசத்தில் கடந்த 19-ம் தேதி மந்தோரி வனப்பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் ரூ.11 கோடி பணம், 52 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த ஆயுதங்களுடன் அவற்றை அடர்ந்த வனப்பகுதி வழியாக கொண்டு சென்ற போது அவர்கள் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர் என்ற தகவல் வெளியானது. அந்த காரை பறிமுதல் செய்த வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கார் யாருக்கு சொந்தமானது என்று விசாரித்த போது அது சேதன் கவுர் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. சேதன் கவுர் பிரபல பில்டர் செளரப் சர்மா என்பவரது நெருங்கிய கூட்டாளி என்று தெரிய வந்துள்ளது.
அவரை பிடித்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் பிடிபட்ட கார் சேதன் பெயரில் இருந்தாலும் அதனை பில்டர் செளரப் சர்மாதான் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. செளரப் சர்மா சாதாரண கான்ஸ்டபிளாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
அதுவும் செளரப் சர்மாவின் தந்தை அரசு துறையில் டாக்டராக பணியாற்றினார். அவர் கடந்த 2015-ம் ஆண்டு பணியில் இருந்த போது இறந்தார். இதனால் செளரப் சர்மாவிற்கு கருணை அடிப்படையில் போக்குவரத்து துறையில் கான்ஸ்டபிள் வேலை கிடைத்தது. ஆனால் போக்குவரத்து துறையில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த செளரப் சர்கா தனது மனைவி, தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினார்.
2023-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு போபாலில் உள்ள முக்கிய பில்டர்களுடன் சேர்ந்து கொண்டு ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப்பறக்க ஆரம்பித்தார்.
மத்திய பிரதேச லோக் அயுக்தா அதிகாரிகள் செளரப் சர்மாவின் வீட்டில் ரெய்டு நடத்தி 7.98 கோடி மதிப்பிலான பணம் மற்றும் வெள்ளியை பறிமுதல் செய்தனர். அதே நாளில் தான் 52 கிலோ தங்கம் மற்றும் 11 கோடி பணத்தை அதிகாரிகளிடம் இருந்து மறைக்க எடுத்துச்சென்ற போது காட்டிற்குள் விட்டுச்சென்றிருக்கலாம். இதனால் ஒரே நேரத்தில் சர்மாவிற்கு எதிராக அமலாக்கப்பிரிவு, வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் மாநில லோக் ஆயுக்தா போன்றவை விசாரணை நடத்தி வருகின்றன. ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட டைரி ஒன்றில் 100 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை செய்தது தொடர்பான தகவல்கள் இருக்கிறது. அதில் பல முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் இருக்கிறது.
அதோடு பினாமி பெயரில் பல சொத்துக்களை செளரப் வாங்கி இருப்பதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் யாரும் இதில் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சர்மா துபாயிக்கு தப்பிச்சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.