விருதுநகர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை... என்ன நடந்தது?
மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்ட கிளை நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தொழிலாளர் நல வாரியம், அனைத்து மகளிர் காவல் நிலையம், சூலக்கரை காவல்நிலையம், மாவட்ட தீயணைப்பு மீட்பு அலுவலர், வங்கி, லஞ்ச ஒழிப்புத்துறை, மாவட்ட குற்றப்புலனாய்வு துறை, வனத்துறை, மாவட்ட மைய நூலகத்துறை என அரசு தொடர்பான முக்கிய அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கும் இடம் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் எப்போதும் பரபரப்புடனே காணப்படும்.
இந்தநிலையில் ஆட்சியர் வளாகத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "இன்று அதிகாலை 5.30 மணி அளவில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நூலகம் அருகே மரத்தில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் முதியவர் பிணமாக கிடப்பதை போலீஸார் கண்டனர். இதையடுத்து அவரின் உடலை மீட்ட போலீஸார், உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவரா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரின் உடமைகளை சோதனை செய்ததிலும் எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை.
எனவே, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாததால் அவரை அடையாளம் காணுவதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் ரெதீஸ், அளித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.