பார்ட்டியில் பாஸுடன் உறவுகொள்ள நிர்ப்பந்தம்; மறுத்த மனைவிக்கு முத்தலாக்? - ஐ.டி ஊழியர் மீது வழக்கு
இஸ்லாமியர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது தடை செய்யப்பட்டு இருந்தாலும், தொடர்ந்து அச்சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது.
மும்பை அருகில் உள்ள கல்யாண் என்ற இடத்தில் வசிக்கும் சோஹைல் ஷேக் என்பவர் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றுகிறார். அவர் சத்ரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சோஹைல் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து அவரை பிரிந்திருந்தார். அவர்களிடையே விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில் தனது மனைவியிடமிருந்து ரூ.15 லட்சம் ரூபாய் கேட்டு சித்ரவதை செய்ய ஆரம்பித்தார். தனது முதல் மனைவிக்கு ரூ.15 லட்சம் கொடுக்கவேண்டும் என்றும், அவரிடமிருந்து விவாகரத்து பெறவேண்டும் என்றும் கோரி அப்பணத்தை கேட்டார்.
அதோடு ஒரு முறை அலுவலகத்தில் பார்ட்டி நடப்பதாக கூறி தனது மனைவியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார். பார்ட்டி முடிந்த பிறகு தனது மனைவியை தனது கம்பெனி உரிமையாளருடன் உறவு வைத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால் அவரது மனைவி அதற்கு மறுத்தார். இதனால் அங்கேயே சோஹைல் தனது மனைவியை அடித்து உதைத்தார். அப்படி இருந்தும் அவரது கோரிக்கைக்கு அவரது மனைவி சம்மதிக்கவில்லை. இதனால் கோபத்தில் சோஹைல் தனது மனைவிக்கு மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்தார். அதோடு வீட்டை விட்டும் தனது மனைவியை விரட்டியடித்தார். இதனால் அவரது மனைவி கல்யாண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.