ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; 15 பேர் உயிரிழப்பு! - என்ன நடக்கிறது அங்கே?
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் பர்மால் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். டிசம்பர் 24ஆம் தேதி இரவு நடந்த இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் உள்ள லாமன் என்ற கிராமம் உட்பட ஏழு கிராமங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நடத்திய இந்த வான்வழி தாக்குதலினால் ஆப்கானிஸ்தானில் உள்ள பர்மால் மாவட்டத்தில் முர்க் பஜார் என்ற பகுதியே முழுமையாக அழிக்கபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் இறப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஜெட் விமானங்களே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் வாழும் வஜிரிஸ்தானி அகதிகள் மீது குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் தாலிபன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எனயதுல்லா குவாரஸ்மி, “இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் வாழும் வஜிரிஸ்தானி அகதிகள் அதிகம் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் உடல்கள் தற்போது கிடைத்துள்ளன. கொல்லப்பட்டவர்களின் உடலை தேடும் பணி தொடர்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக பாகிஸ்தான் தாலிபன்கள் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் என்பவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்துகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. எனவே அவர்கள் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறைவிடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குகிறது. வஜிரிஸ்தானி அகதிகள் இறைமையுடன் சுதந்திரமாக எங்கள் நிலத்தில் வாழத் தகுதி அடைந்தவர்கள் என ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. வஜிரிஸ்தானி அகதிகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் மீது நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.