நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
அண்ணா பல்கலைகழகம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி - கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு இருவரும் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாணவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர், மாணவியை பாலியால் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது.
டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த ஸ்டாலின் மாடல் அரசு, எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் ஸ்டாலினின் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அமுமுக-வின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில் ``சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கும் இந்த விரும்பத்தகாத சம்பவம் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மாநிலத்தின் தலைநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம், தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.