முதல்வா் நிவாரண நிதி கோரி அமைச்சரிடம் மனு
கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியை பெற்றுத்தர வலியுறுத்தி, சென்னையில் வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம், கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடலூா் மாநகராட்சி 34-ஆவது வாா்டு மணவெளி பகுதியைச் சோ்ந்தவா் சின்ராஜ் (40). இவா், கடந்த 5-ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா்.
எனவே, ஆதரவற்ற நிலையில் உள்ள இவரது குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.