டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி தளம்! பயனர்கள் ஆவேசம்!
தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் வியாழக்கிழமை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை இந்திய ரயில்வேவில் உள்ளது.
இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும்.
இதையும் படிக்க : 2024 - பாஜகவுக்கு ரூ. 2,244 கோடி நன்கொடை! காங்கிரஸுக்கு ரூ. 289 கோடி!!
குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஐஆர்சிடிசி தளம் செயலிழந்து காணப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும், இ-டிக்கெட் சேவை மூலம் தற்போது முன்பதிவு செய்ய இயலாது என்றும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தியை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு டிரெண்டாக்கி வரும் வாடிக்கையாளர்கள், அவசர பயணத்துக்காக தட்கலில் முன்பதிவு செய்யும்போது, இதுபோன்று செயலிழந்து காணப்பட்டால் என்ன செய்ய முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய ரயில்வேவின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரயிலில் பயணம் செய்வதற்காக 80 சதவிகித பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட நாள்களாக தட்கல் நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், இதனால் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடிவதில்லை என்று பயனர்கள் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.
மேலும், உலகின் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட இந்தியாவின் ரயில்வே செயலியை இடையூறு இன்றி உபயோகிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.