முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 82 ரன்கள் குவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20, ஒருநாள் தொடர்கள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் இன்று (டிசம்பர் 26) செஞ்சூரியனில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 71 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: வீரேந்திர சேவாக்கை நினைவூட்டிய சாம் கொன்ஸ்டாஸ்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் புகழாரம்!
தென்னாப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டோனி டி ஸார்ஸி (2 ரன்கள்), ரியன் ரிக்கல்டான் (8 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அய்டன் மார்க்ரம் 47 ரன்களுடனும், கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: உஸ்மான் கவாஜா மீதான அழுத்தத்தை போக்கிய சாம் கொன்ஸ்டாஸ்!
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 129 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.