செய்திகள் :

Rewind 2024: நாடாளுமன்றம் முதல் சட்டமன்றங்கள் வரை... இந்த ஆண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் என்னென்ன?

post image
மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியா, இந்த (2024) ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரை பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது.

இதில், பெரிதும் கவனம் பெற்ற தேர்தல்களென நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தல்களையும் குறிப்பிடலாம்.

அரசியலமைப்புச் சட்டம் - ராகுல் காந்தி - மோடி

18-வது மக்களவையின் 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) வரை நடந்து முடிந்தது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முதல் எதிர்க்கட்சிகளில் 'இந்தியா கூட்டணி' வரை, ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு டஃப் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், கடுமையான பிரசாரங்கள் என பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் பிரதமர் மோடியும் பம்பரமாகப் பணியாற்றினர். இதன் விளைவாக பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. முடிவாகப் பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க கட்சியானது என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

மோடி

நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போதே வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடந்தது. அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 50 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மாநிலத்தின் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்தன. ஆளும் பா.ஜ.க 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.

காங்கிரஸ் கட்சி19 தொகுதிகளில் போட்டியிட்டது. ஜூன் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து, இறுதிக்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பா.ஜ.க 46 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. தேசிய மக்கள் கட்சி 5, தேசியவாத காங்கிரஸ் 3, அருணாசல் மக்கள் கட்சி 2, காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றிபெற்றன. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 2019 ஆம் ஆண்டைப் போல, இந்த முறையும் பெமா காண்டு முதல்வராகப் பதவியேற்றார்.

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு

சிக்கிம் மாநிலத்தின் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்.கே.எம்) 32 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 32 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பா.ஜ.க 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

பிரேம் சிங் தமாங்

வாக்கு எண்ணிக்கை நடந்து, பிற்பகலில் முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு (எஸ்.டி.எப்) ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. தேசியக் கட்சிகளான பா.ஜ.கவும், காங்கிரஸும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்.

ஆந்திர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் மே 13-ம் தேதி நடைபெற்றது. 175 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடந்தது. மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை விட ஆந்திராவின் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் கவனம் பெற்றது. அதற்குக் காரணம், இந்தியாவில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் ஆந்திரா, பீகாரின் கரங்கள் ஓங்கியிருந்தது. இந்தத் தேர்தலின் முடிவில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியிலிருந்த ஜெகன் மோகன் ரெட்டி, இந்த தோல்விக்கு நானே பொறுப்பு என இரண்டு கைகளையும் தூக்கி தொண்டர்களிடம் சரணடைந்தார்.

ஆந்திரா - மோடி - சந்திரபாபு நாயுடு

ஒடிசா - நவீன் பட்நாயக் இரண்டையும் பிரிக்கவே முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை அசைத்துப் பார்த்த ஆண்டு இந்த 2024. தொடர்ந்து ஐந்து முறை முதல்வராக இருந்த பி.ஜே.டி கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், மே 13, 20, 25, ஜூன் 1-ம் தேதி என 4 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 78 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. நவீன் பட்நாயக்கின் பி.ஜே.டி 51 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் வென்றது. கடந்த தேர்தலில் 112 இடங்களில் வென்ற நவீன் பட்நாயக் அதில் பாதி இடங்களைக் கூடப் பெறாது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2000-ம் ஆண்டு முதல் முதல்வராகப் பதவி வகித்தவர் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ஆர்டிகிள் 370 ரத்து, ஜம்மு & காஷ்மீர் - லடாக் எனப் பிரித்தது, மாநில அந்தஸ்து நீக்கம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தேர்தல் எனப் பல முக்கிய விஷயங்களை உள்ளடக்கி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தனியேவும் களம் கண்டன.

உமர் அப்துல்லா

அக்டோபர் 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகள், காங்கிரஸ் 6 தொகுதிகள், சி.பி.எம். 1 தொகுதி என வெற்றி பெற்றன. அதேபோல் தனித்து களம் கண்ட பா.ஜ.க. 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்றார்.

ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில், காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்லப்பட்டது. 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை. ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, ஹரியானாவில் பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் வென்றன. அதேபோல், மாநிலக் கட்சியான லோக் தல் 2 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வென்றன.

நயாப் சிங் சைனி

இதன் மூலம், ஆட்சி அமைக்கத் தேவையான 46 தொகுதிகளுக்கும் மேலாக 48 தொகுதிகளை வென்ற பா.ஜ.க. ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைத்தது. நயாப் சிங் சைனி முதல்வராகப் பொறுப்பேட்டார். மேலும், 37 தொகுதிகளில் வென்றுள்ள காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக ஹரியானா சட்டமன்றத்தினுள் நுழைந்தது.

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவருடைய கைதுக்குப் பிறகு ஜார்கண்ட் அரசியல் களம் பரபரப்பாக ஆரம்பித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாக் கூட்டணிக்கு ஆதரவாக ஹேமந்த் சோரன் மனைவியின் தீவிரப் பிரசாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.

ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணிக்கும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ஆர்.ஜே.டி 4 இடங்களையும் கைப்பற்றின. அதாவது இந்தியா கூட்டணி மொத்தம் 56 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. பா.ஜ.க 21 இடங்களை மட்டுமே வசப்படுத்தியது.

ஹேமந்த் சோரன்

அரசியல் பரபரப்புக்குப் பெயர் போன மாநிலங்களில் முக்கிய இடம் மகாராஷ்டிராவுக்கு உண்டு. இரண்டாக உடைக்கப்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அதைச் சுற்றி நடந்த அரசியல் விளையாட்டுகள் என 288 சட்டப்பேரவைத் தொகுதிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகக் கடந்த நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட தலைமை), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தலைமை) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி, சரத் பவார் அணி அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

நவம்பர் 23-ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், 288 தொகுதிகளில், 148 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 133 தொகுதிகளையும், 80 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 57 தொகுதிகளையும், 53 தொகுதிகளில் போட்டியிட்ட துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளையும் வசப்படுத்தின. 236 இடங்களை வென்ற மகாயுதி கூட்டணியின் சார்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்றார்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே அணி 89 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளிலும், சரத் பவார் அணி 87 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும் வென்றன.

8 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க கூட்டணி 4 மாநிலங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 2 மாநிலங்களிலும், மாநிலக் கட்சிகள் 2 மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றன.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

Manmohan Singh : 'வரலாறு உங்களுக்காக கர்ஜிக்கும்' - மெளன மொழி பேசியவரின் முழு வரலாறு!

அந்த இரு சம்பவங்கள்!1999 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தெற்கு டெல்லியில் மன்மோகன் சிங் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ்க்காரர்கள் களத்தில் குதித்து தீவிரமாக வேலைப் ப... மேலும் பார்க்க

Manmohan Singh: `BMW வேண்டாமே'- மாருதி 800 மீதான மன்மோகன் சிங்-ன் காதல்; பகிரும் முன்னாள் பாதுகாவலர்

நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், முன்பு மன்மோகன் சி... மேலும் பார்க்க

Annamalai: 'சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு போராட்டம்' - அண்ணாமலை நகர்வுகள் கைகொடுக்குமா?

சமீபத்தில் சென்னை, அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க-வை சேர்ந்தவர் என பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. ம... மேலும் பார்க்க

Manmohan Singh: மோடியின் பணமதிப்பிழப்பும், மன்மோகன் சிங் சொன்னதைப் போலவே சரிந்த GDP-ம்!

மத்தியில் 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் 2016 நவம்பர் 8-ம் தேதி, `இனி ரூ. 500, ரூ. 1000' ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சியைத் தந்தார் பிரதமர் மோடி. ஒரே நாளில் மொத்த எளிய மக்கள... மேலும் பார்க்க

ஏமனை தாக்கிய இஸ்ரேல்; நூலிழையில் தப்பித்த WHO தலைவர் - தாக்குதல் குறித்து என்ன சொல்கிறார் அவர்?!

பாலஸ்தீனம், லெபனான், இரான்... தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப... மேலும் பார்க்க

'அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் துரதிஷ்டவசமானது...' - அமைச்சர் கோவி.செழியன் சொல்வதென்ன?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க