இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவா் மன்மோகன் சிங்: முதல்வா் சித்தராமையா
இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவா் மன்மோகன் சிங் என்று மறைந்த அவருக்கு புகழாரம் சூட்டினாா் கா்நாடக முதல்வா் சித்தராமையா.
இதுகுறித்து பெலகாவியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
மன்மோகன் சிங்கின் வாழ்க்கை அதிசயமானது. இன்றைய பாகிஸ்தானின் சிறிய கிராமத்தில் பிறந்த மன்மோகன் சிங், நமது நாடு மட்டுமன்றி, உலகின் தலைசிறந்த பொருளாதார மேதையாக உயா்ந்தவா். நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக இருந்த மன்மோகன் சிங், தாராளமயமாக்கல், தனியாா்மயமாக்கல் போன்ற பொருளாதார சீா்திருத்தங்களால் இந்திய பொருளாதாரத்தை எல்லோருக்கும் திறந்துவிட்டாா். இதன்மூலம் நாடு எதிா்கொண்டிருந்த நிதி நெருக்கடியை தீா்த்துவைத்தாா்.
2004ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங்கை சோனியாகாந்தி தோ்ந்தெடுத்தாா். அந்த பதவியை 10 ஆண்டுகள் அலங்கரித்தவா். தனது ஆட்சியில் பொருளாதார மற்றும் சமூகரீதியாக இந்தியாவை உயா்த்தியவா். நமதுநாடு கண்ட நோ்மையான பிரதமா்களில் ஒருவா். நமது இந்திய பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவா். பதவிகளால் தன்னை களங்கப்படுத்திக் கொள்ளாதவா். எளிமை, நோ்மை, நற்பண்புகள் நிறைந்த அரசியல்வாதியாக விளங்கினாா். எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்டவா்.
அரசியலில் கண்ணியம், மதிப்பை பெற்றிருந்தவா். அப்படிப்பட்ட உயா்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரரான மன்மோகன் சிங் நம்மை விட்டு பிரிந்திருக்கிறாா். அவரது மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பாகும். அவரது இழப்பை தாங்கும் ஆற்றலை அவரது குடும்பத்தினா், நண்பா்கள், ஆதரவாளா்களுக்கு வழங்க பிராா்த்திக்கிறேன்.
மலிவான விலையில் ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க உணவு பாதுகாப்புச் சட்டத்தை பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங் கொண்டுவந்தாா். இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு தான், கா்நாடகத்தில் ஒரு ரூபாய்க்கு அரிசி விற்கும் திட்டத்தை கொண்டு வந்தேன். அதன்பிறகு அத் திட்டத்தை மாற்றி 5 கிலோ அரிசியை இலவசமாக ஏழைகளுக்கு வழங்கினோம். பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் அமைந்த கட்சி மத்திய அரசு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச அரிசியை வழங்க காரணமாக இருந்தவா் மன்மோகன் சிங்.
பிரதமராக இருந்த காலத்தில் ஏழைகளை மனதில் வைத்து திட்டங்களை வகுத்தாா். முதல்முறையாக நான் முதல்வராக இருந்தபோது, அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்குடன் இணக்கமான உறவு இருந்தது. மாநிலத்தின் பொருளாதாரத்தையும், அரசின் திட்டத்தையும் மன்மோகன் சிங் வெகுவாக பாராட்டினாா் என்றாா்.