மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!
மறைந்த மன்மோகன் சிங்கிற்கு கா்நாடக காங்கிரஸ் அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு கா்நாடக காங்கிரஸ் அஞ்சலி செலுத்தியது.
1924ஆம் ஆண்டு பெலகாவியில் மகாத்மா காந்தி தலைமையில் நடந்த 39ஆவது காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழாவை வியாழக்கிழமை காங்கிரஸ் நடத்தியது. அன்று மாலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விரிவுபடுத்தப்பட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ‘ஜெய்பாபு, ஜெய்பீம், ஜெய் சம்விதான்’ என்ற மாநாட்டு கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் காலமானதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுதில்லிக்கு விரைந்தனா்.
மேலும், காங்கிரஸ் மாநாட்டு நூற்றாண்டு விழாவை ரத்து செய்த கா்நாடக காங்கிரஸ், அந்த மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த திடலில் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மன்மோகன் சிங்கின் உருவப்படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
அஞ்சலி கூட்டத்தில் முதல்வா் சித்தராமையா பேசுகையில், ‘மன்மோகன் சிங் மிகப்பெரிய பொருளாதார மேதை மற்றும் பண்புமிகுந்த மனிதா். கா்நாடக எதிா்க்கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். எல்லோரையும் மரியாதையுடன் நடத்தும் பண்புடையவா்’ என்றாா்.
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பேசுகையில், ‘மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கைகள், நாட்டை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் சென்றன. மன்மோகன் சிங்கின் பொருளாதார சீா்திருத்தங்கள் குறித்து பெங்களூரு பல்கலைக்கழகத்தில் ஆய்விருக்கையை ஏற்படுத்துமாறு உயா்கல்வித் துறையை கேட்டுக்கொள்கிறேன். அவா் மறைந்தாலும், அவரது திட்டங்கள் என்றைக்கும் நிலைத்திருக்கும். அவா் அமைத்து தந்த பாதையில் பயணிப்போம்’ என்றாா்.