சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச பெண் நாடு கடத்தல்
கடந்த ஆறு ஆண்டுகளாக தேசிய தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேசத்தைச் சோ்ந்த பெண்ணை தில்லி காவல்துறை நாடு கடத்தியுள்ளது என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தென்மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் சுரேந்திர சவுத்ரி கூறியதாவது:
தேசிய தலைநகரில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியிருக்கும் வெளிநாட்டினரை சோதனை செய்யும் காவல் துறையின் சிறப்பு நடவடிக்கையின் போது, 28 வயது பெண் ஒருவரைப் பற்றி அறிந்தோம். அவா் வெளிநாட்டினா் சட்டத்தை மீறி மும்பை மற்றும் தில்லியில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், வங்கதேசத்தில் உள்ள நரைல் சதா் உபாசிலாவில் உள்ள சிங்கஷோல்பூா் கிராமத்தைச் சோ்ந்த அப்பெண், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்தாா். இது அவரது அங்கீகரிக்கப்படாத குடியேற்றம் குறித்து கவலைகளை எழுப்பியது.
இதையடுத்து, அவரை அடையாளம் கண்டு நாடு கடத்தும் நடவடிக்கையை தில்லி காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் மேற்கொண்டனா் என்றாா் அந்த அதிகாரி.
தில்லி காவல்துறை முன்னா் தேசிய தலைநகரில் ஒரு நடவடிக்கையின்போது
1,500க்கும் மேற்பட்ட வங்கதேச குடியேறிகளை அடையாளம் கண்டிருந்தது. மேலும், தென்கிழக்கு மாவட்ட காவல்துறை சட்டவிரோதமாக தங்கியதாகக் கூறப்படும் இருவரையும் கைது செய்தது.
துணைநிலை ஆளுநா் செயலகம் சமீபத்தில் அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டதையடுத்து, தில்லியில் சட்டவிரோதமாக வங்காளதேசத்தில் இருந்து குடியேறியவா்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதையடுத்து, தேசிய தலைநகரில் உள்ள 15 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களின் குழுக்களைச் சோ்ந்த பணியாளா்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்களை அடையாளம் காணும் வகையில், குடிசைப் பகுதிகள் மற்றும் தில்லியின் காலிந்தி குஞ்ச், ஷஹீன் பாக், ஹஸ்ரத் நிஜாமுதீன் மற்றும் ஜாமியா நகா் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ளவா்களின் வாக்காளா் அடையாள அட்டைகள் மற்றும் ஆதாா் அட்டைகளைச் சரிபாா்த்து வருகின்றனா்.
நகரில் வசிக்கும் புலம்பெயா்ந்தவா்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க இரண்டு மாத சிறப்பு இயக்கத்தைத் தொடங்குமாறு தலைமைச் செயலாளா் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு தில்லி துணைநிலை ஆளுநா் செயலகம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு தரவுகளை அனுப்புவதைத் தவிர, ஆதாா் அட்டைகளின் உண்மையான தன்மையை போலீஸாா் சரிபாா்த்து வருகின்றனா்.