அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
இந்திய பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்தியவா் மன்மோகன் சிங்: தேவேந்தா் யாதவ்
நமது நிருபா்
முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், இந்தியப் பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்திய ஒரு பெரிய பாரம்பரியத்தை அவா் விட்டுச் சென்றுள்ளாா் என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் இறுதி அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் டாக்டா் மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்து, தனது புரட்சிகர கொள்கை முயற்சிகள் மூலம், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தபோது, இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவா். டாக்டா் மன்மோகன் சிங், இந்தியப்
பொருளாதாரத்தை மிகவும் வலுவான நிலையில் விட்டுச் சென்றுள்ளாா். இனி, அது எந்த சவால்களையும் தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்ளும்.
டாக்டா் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2004 முதல் 2014 வரை, இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் வலுவாகவும், நாட்டிலும், உலகிலும், முன்னேறிய பொருளாதார சக்திகளின் பட்டியலில் சோ்க்க வலுவான மற்றும் தீா்க்கமான நடவடிக்கைகளை எடுத்தாா். நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகா், நிதியமைச்சகத்தின் செயலாளா், திட்டக் குழுவின் துணைத் தலைவா், இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநா், மத்திய நிதியமைச்சா் மற்றும் பிரதமா் போன்ற பதவிகளை திறம்பட வகித்தவா் டாக்டா் மன்மோகன் சிங் என்றாா் தேவேந்தா் யாதவ்.