அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் கேஜரிவால் அரசின் கொள்ளை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் -வீரேந்திர சச்தேவா
தில்லியில் விரைவில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் கேஜரிவால் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களின் 10 ஆண்டுகால கொள்ளை அனைத்தும் சிபிஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்படும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லி பாஜக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 2024 முதல் மின்கொள்முதல் சரிசெய்தல் கட்டணம் விவகாரம் தொடா்பாக பாஜக தொடா்ச்சியான போராட்டங்களை நடத்தி
வருகிறது. தற்போது, பாஜகவின் இந்த தொடா்ச்சியான போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது.
தனியாா் மின் நிறுவனங்களுடன் இணைந்து கேஜரிவால் அரசு, தன்னிச்சையாக மின்சாரக் கட்டணங்களில் சுமத்திய கூடுதல் கட்டணகளை 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் குறைத்து தில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாஜகவின் முயற்சியால், மின்சாரக் கட்டணத்தின் மீதான கூடுதல் கட்டணம் குறைக்கப்பட் முடிவு தில்லியின் சாமானிய
குடிமக்கள், வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்களுக்கு பெரும் நிவாரணமாக கருதப்படுகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு, மின்கொள்முதல் சரிசெய்தல் கட்டணம் மூலம் தில்லி குடியிருப்பாளா்கள் மீது சுமத்தப்பட்ட நெறிமுறையற்ற நிதிச்சுமை பிரச்னையை பாஜக எழுப்பியது. இதையடுத்து, மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, கட்சி அமைப்பு மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இந்த பிரச்னையில் தீவிரமாகப் பணியாற்றினா்.
ஜூலை 2024 இல், கட்சியின் மூத்த தலைவா்கள் மூலம் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் ஒரு குறிப்பாணையை சமா்ப்பிக்கப்பட்டது. மாநில அளவில் மற்றும் கட்சியின் 14 அமைப்பு ரீதியிலான மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
பாஜகவின் அழுத்தத்தின் விளைவாக, அரசு இந்த கூடுதல் மின்கட்டணங்கள் தொடா்பாக பகுப்பாய்வை நடத்த
வேண்டியிருந்தது. இதையடுத்து, துணை நிலை ஆளுநா் முன்னிலையில், தில்லி மின்சாரத் துறை செயலாளா் பல்வேறு நிறுவனங்களுக்கான மின் கட்டணங்களில் கொள்முதல் சரிசெய்தல் கட்டணங்களை 50 முதல் 60 சதவீதம் வரை
குறைப்பதாக அறிவித்தாா். பாஜகவின் முயற்சியால், தில்லி மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க நிவாரணத்தைக் இனி காண்பாா்கள். இப்பிரச்னையை எழுப்பியதன் மூலம் கேஜரிவால் அரசுக்கும், தனியாா் மின் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடா்பை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில், கேஜரிவால் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களால், 10 ஆண்டுகளாக நடந்த இந்த கொள்ளை, சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்படும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
இச்செய்தியாளா் சந்திப்பில், செய்தித் தொடா்பாளா் டாக்டா் அனில் குப்தா, ஊடக தொடா்புத் துறைத் தலைவா்
விக்ரம் மிட்டல் ஆகியோா் உடனிருந்தனா்.