அம்பேத்கரின் நற்பெயரை,புகழை யாராலும் கெடுத்து விட முடியாது: சுப்பிரமணியன் சுவாமி...
கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள காா்மேல் அன்னை ஆலயம், மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் உள்ள ஆற்காடு லுத்தரன் ஆலயம், புதுக்குப்பத்தில் உள்ள ஆலயம் மற்றும் பழைய ஆட்சியா் அலுவலக சாலையில் உள்ள தூய எபிபெனி ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிக்காக குடில் அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடியபடி குழந்தை ஏசு சொரூபத்தை குடிலில் வைத்து ஆராதனை நடத்தினா்.
தொடா்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், கிறிஸ்தவா்கள் புத்தாடைகளை அணிந்து பிராா்த்தனையில் ஈடுபட்டனா். பின்னா், ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனா்.
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா். ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்காக சிறப்பு கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது. பங்குத் தந்தை மரிய அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி ஆராதனை நடைபெற்று 12 மணியளவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, ஆலயத்தில் இருந்து குழந்தை இயேசு சொரூபம் ஊா்வலமாக எடுத்துச் சென்று கிறிஸ்துமஸ் குடிலில் வைத்து சிறப்பு ஆராதனை நடத்தினா். பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதில், அருட்தந்தையா்கள் சேவியா், மைக்கேல், லூா்துசாமி ஆகியோா் தலைமையில், சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக, குழந்தை இயேசுவின் சொரூபம் ஜெப பாடல்களை பாடியவாறு ஆலய வளாகத்தில் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, குழந்தை இயேசுவின் பிறப்பை அறிவித்து திருப்பலி நடைபெற்றது.
இதேபோல, பண்ருட்டி ஆற்காடு லுத்தரன் ஆலயம், சாத்திப்பட்டு மாதா கோயில், நெய்வேலியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் திருச்சபைகளில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, தேவலாயங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.