Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்.....
அண்ணா பல்கலை. மாணவிக்குப் பாலியல் தொல்லை; கைதான இளைஞரின் பகீர் பின்னணி; போலீஸ் சொல்வதென்ன?
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். அந்த மாணவியும் அவரின் ஆண் நண்பரும் கடந்த 23-ம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மாணவியையும் அவரின் ஆண் நண்பரையும் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை அவர்களிடம் காண்பித்த மர்ம நபர், "நான் சொற்படி கேட்கவில்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன்" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும் அவரின் ஆண் நண்பரும் மர்ம நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவி புகார்
இந்தச் சமயத்தில் அந்த மர்ம நபர், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாணவி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அதோடு அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் செல்போன் சிக்னலையும் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு ஞானசேகரனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஞானசேகரின் பின்னணி குறித்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், "கைது செய்யப்பட்ட ஞானசேகரன், அந்தப் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்திருக்கிறார். இவர் பிரியாணி மாஸ்டராகவும் இருந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைந்து மது அருந்தி வந்த ஞானசேகரன், கடந்த சில ஆண்டுக்கு முன்பு மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கி கைதாகி சிறைக்குச் சென்றிருக்கிறார். அதன்பிறகு ஒரு குற்ற வழக்கும் ஞானசேகரன் மீது உள்ளது. இந்தச் சூழலில்தான் சம்பவத்தன்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆய்வகம் ஒன்றின் கட்டடத்துக்குப் பின்பகுதியில் மாணவியும் அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவன் ஒருவரும் தனியாகச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இருட்டு பகுதியில் இருவர் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு அங்குப் பிரியாணி மாஸ்டர் ஞானசேகரன் சென்றிருக்கிறார். அப்போது இருவரையும் வீடியோ எடுத்த ஞானசேகரன், அவர்களை மிரட்டி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இருட்டில் மாணவியிடம் அநாகரீகமாக நடந்த மர்ம நபர் குறித்து உடனடியாக மாணவி தரப்பில் புகாரளிக்கப்படவில்லை. ஆனால் தனக்குத் தெரிந்தவர்களிடம் மாணவி விவரத்தைக் கூறிய பிறகே பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் தகவல் சென்றிருக்கிறது. இதையடுத்து எங்களுக்குப் புகார் வந்ததும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களைச் சேகரித்து ஞானசேகரனைக் கைது செய்திருக்கிறோம்" என்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...