No-detention policy scrap: கல்வியின் பொறுப்பை குழந்தைகள் மீது சுமத்துவதா... அரசின் கடமைகள் என்னென்ன?
மத்திய அரசு கடந்த வராம் சத்தமே இல்லாமல், தேர்தல் தொடர்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெறமுடியாத வகையில் தேர்தல் நடத்தை விதியில் திருத்தம் கொண்டுவந்த பரபரப்பு ஓய்வதற்குள், பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சியளிக்கும் no-detention policy-யை ரத்து செய்வதாக அறிவித்தது. அதுவும், மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிகளில் மட்டும் இது ரத்து. மேலும், 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் உடனடித் தேர்வு நடத்தப்படும் என்று கூறும் மத்திய அரசு, அந்த உடனடித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்கிறது.
இதற்கு, பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த போதிலும், கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் no-detention policy-யை ரத்து செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாக மத்தியில் ஆளும் தரப்பிலிருந்து விளக்கங்கள் தரப்பட்டது. இவ்வாறிருக்க, no-detention policy-யை நீக்கியது குழந்தைகளிடத்தில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு இந்தத் திட்டத்தை நீக்குவதுதான் வழியா என்பது தொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்.
அப்போது அவர், ``ஒன்றிய அரசு எடுத்திருக்கின்ற இந்த முடிவு நியாயமான முடிவு கிடையாது. ஏனெனில், உலகம் முழுக்க 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடத்தில் ஆய்வு நடத்தியதில், தேர்வு என்பது அவர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் NCERT 2005-ல் நடத்திய ஆய்வுகளிலும் இதே விஷயம்தான் சொல்லப்பட்டது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேர்வு நடத்த வேண்டாம் என்று ஆய்வின் முடிவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதை ஆல் பாஸ் என்று புரிந்துகொள்கிறார்கள். இந்த சொல்லாடலே தவறானது. இப்போது, தொடக்கப்பள்ளியைப் பொறுத்தளவில் 200 லிருந்து 225 நாள்கள் வேலைநாள்கள். இத்தனை நாள்கள் குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது, ஆசிரியர்கள் முழுமையாகக் கற்பித்தல் பணியில் மட்டும் ஈடுபட வேண்டும்.
கற்றல் செயல்பாட்டில் குழந்தை எவ்வாறு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது, பாடப்புத்தகத்தில் எந்த அளவுக்கு எழுத்து கூட்டி குழந்தைகள் படிக்கிறார்கள் என்று ஃபார்மேடிவ் அசெஸ்மென்ட் (FA), சம்மேட்டிவ் அசெஸ்மென்ட் (SA) ஆசிரியர்கள் செய்யவேண்டும். இவையிரண்டையும் சேர்த்துதான் CCE (Continuous and Comprehensive Evaluation) செய்யப்படும். அதாவது ஒரு முழுமையான மதிப்பீடு. இதில், சில குழந்தைகளுக்கு கற்றல் செயல்பாட்டில் குறைகள் இருக்கலாம். அதை ஆசிரியர்கள் கவனித்து அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பொறுப்பு பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. ஆனால், இப்போது தேர்வில் மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று குழந்தைகளிடம் பொறுப்பைக் கொடுக்கிறார்கள். இது உளவியல் ரீதியாக மன அழுத்தத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்.
5-ம் வகுப்பு குழந்தைக்கு 2-ம் வகுப்பு புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லையே என்று கூறுபவர்கள், அந்தக் குழந்தைக்கு ஆசிரியர் 225 நாள்களும் வகுப்பில் பாடம் எடுத்தார்களா என்பதைச் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையின் சமூக பின்னணியைப் பார்க்க வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஆதரவு தேவைப்படுகிறதா, அதற்கேற்ற வசதிகள் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இத்தகைய சூழலில், இப்படியான ஒரு முடிவு சமூகத்தை மீண்டும் பின்னுக்கு இழுக்கிறது. ஒன்றிய அரசின் கீழுள்ள பள்ளிகளுக்குத்தான் இது பொருத்தும், மாநில அரசின் கீழுள்ள பள்ளிகளுக்கு இது பொருந்தாது என்றால், அங்கு படிப்பவர்கள் குழந்தைகள் இல்லையா? இது குழந்தைகளின் மனநிலை சம்பந்தப்பட்டது.
ஒன்றிய அரசு செய்ய வேண்டியது என்னவென்றால், எல்லா மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகளில் போதுமான அளவுக்கு ஆசிரியர்களை நியமிக்க நிதியைக் கொடுக்க வேண்டும். பள்ளிகளில் முழுநேர ஆசியர்களின் அலுவலக வேலைகளைக் கவனிக்க அலுவலக ஊழியர்கள் உட்பட பள்ளிக்குத் தேவையான அனைத்து ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பாகுபாடில்லாத கல்வியைக் கொடுக்க வேண்டும்.
அதற்கான, நிதியைக் கொடுக்க முடியவில்லை என்றால் கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எல்லா குழந்தைக்கும் சமமான கற்றல் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து பள்ளிகளிலும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். ஆனால், அதைச் செய்ய மறுக்கும் அரசு, மக்களைத் திசை திருப்பும் வகையில் தேர்வுகளை வைக்கிறது.
1927-ல், பாம்பே யூனிவர்சிட்டி மசோதா பற்றி நடந்த விவாதத்தில் அம்பேத்கர், ``கல்வியைக் கொடுக்கச் சொன்னால் தேர்வுகளைக் கடினமாக்குகிறார்கள். கல்வியும், தேர்வும் ஒன்றல்ல. தேர்வுகளைக் கடினமாக்குவது, இதுவரை கல்வி வளாகத்துக்குள்ளேயே வராத கல்வியில் பின்தங்கிய சமூகத்தினர் இனி என்றைக்குமே வர முடியாத நிலைக்குப் போய்விடாதா?" என்ற கேள்வியை எழுப்பினார். இப்போது, கல்வியைப் பரவலாக்குவதற்குப் பதிலாகத் தேர்வுகளை வைத்து மிரட்டுகிறார்கள். இதில், பொறுப்பு பள்ளிக்கும், ஆசிரியருக்கும், அரசுக்கும் என்பதற்குப் பதிலாக, நீ படிக்க வில்லையென்றால் நாங்கள் என்ன செய்ய என்று குழந்தைகள் மீது பழியைப் போடுகிறார்கள். இது, முன்னேறக்கூடிய சமூகத்தில் நடக்கக்கூடாதா செயல். இந்த உரிமை குழந்தை அணுகுமுறைக்கு எதிரானது." என்று கூறினார்.
அதேபோல், மத்திய அரசின் இந்த செயல் குறித்து தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தைச் சேர்ந்த சு.உமாமகேஸ்வரியிடம் பேசியபோது, ``குழந்தைகளுக்கு ஆல் பாஸ் சிஸ்டம் வந்த பிறகு யாரும் பொறுப்பு எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த 10-15 ஆண்டுகளில் கல்வியின் தரம் மிகவும் மோசமாகிவிட்டது. பள்ளி கல்விக்கு மதிப்பே இல்லை என்ற அளவுக்கு, அனைத்தையும் போட்டித் தேர்வுகள் தான் நிர்ணயம் செய்கிறது. பள்ளி கல்வி இப்படி நீர்த்துபோய்க் கொண்டிருக்கும் வேளையில், no-detention policy-யை ரத்து செய்கிறார்கள். ஆனால், கல்வியின் தரத்தை உயர்த்தாமல், சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தால், நிச்சயமாக நிறைய தவறுகள் நடக்கும்.
குழந்தைகளை மார்க் வாங்க வைப்பதை மட்டுமே பள்ளிகள் செய்கின்றன. தரமான ஆசிரியர்கள், தரமான கல்வி உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திவிட்டு, no-detention policy-யை தூக்கினால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பொறுப்பு வரும். ஆல் பாஸ் சிஸ்டம் வந்ததால்தான் குழந்தைகள் வீணாகிப் போய்விட்டனர் என்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை என்று அரசு சொல்கிறது. இன்னொருபக்கம் எது நல்ல பள்ளி என்று பெற்றோர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த சிக்கல்களையெல்லாம் தீர்க்காமல் இதைச் செய்வதால் எந்தப் பலனும் இல்லை. கல்வியைத் தரமாகக் கொடுத்தால் no-detention policy-யே தேவையில்லை. கல்வி என்றாலே மதிப்பெண், தேர்வு மட்டுமே என்றாகிவிட்டது. தேர்வு என்றாலே குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். இதில் மிகப்பெரிய விவாதமும், மாற்றமும் வரவேண்டும். 2023-ம் ஆண்டைப் பொறுத்தவரையில், இந்தியா முழுவதும் 1,28,126 பெண் குழந்தைகள், 1,94,350 ஆண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலிருக்கிறார்கள். இதற்கு உண்மையான காரணம் என்ன, என்னென்ன வாய்ப்புகள் அவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதைக் கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சரியான கற்றல் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தினால் no-detention policy-யைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்." என்றார்.
அரசு முதலில் பள்ளிகளில் ஆசியர்கள், குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். அதற்கடுத்து, குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தரமாகக் கற்பித்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இவற்றின் முடிவுகளே இறுதியில் குழந்தைகளின் ரிசல்ட்டில் வெளிப்படும். இந்த வரிசையில், தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த வகுப்புக்கு செல்லமுடியும் என்று நேராக குழந்தைகள் மீது இந்தப் பொறுப்பை சுமத்துவது சரியா என்பதே இப்போது விவாதிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து உங்களின் கருத்துகளை கமெண்டில் பதிவிடுங்கள்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...