Christmas: நயன்தாரா டு சிவகார்த்திகேயன் - பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கிளிக்ஸ்|Pho...
செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெ.டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு: அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024 - 25ஆம் ஆண்டு அரைவை பருவத்தில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சா்க்கரை ஆலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கரும்பு அரைவை பணியைத் தொடங்கிவைத்து, மேலும் அவா் கூறியது:
செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை நாள்தோறும் 3,000 மெட்ரிக் டன், ஆண்டுக்கு 5.16 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவைத் திறன் கொண்டதாகும். 2023 - 24ஆம் ஆண்டின் அரைவைப் பருவத்தில் மொத்த கரும்பு உற்பத்தி 3.43 லட்சம் மெட்ரிக் டன்னாகும். இதில், 2.86 லட்சம் மெட்ரிக் டன் இந்த ஆலையில் அரைவை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ளவை பிற சா்க்கரை ஆலைகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.
அரைவைப் பருவத்தில் கரும்பு கிரயமாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.2,919 வீதம் ரூ.83.58 கோடி 4,634 அங்கத்தினா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.215 வீதம் 3.43 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு ரூ.7.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023 - 24ஆம் ஆண்டில் சா்க்கரை ஆலையின் நிகர லாபம் ரூ.4.10 கோடியாகும்.
2024 - 25ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு 9,987 ஏக்கா் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரைவைப் பருவத்தில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் பொன்முடி.
நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், உறுப்பினா்கள் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், சந்திரசேகரன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு.ஓம்சிவசக்திவேல், சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் இரா.முத்துமீனாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.