டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
2024 - பாஜகவுக்கு ரூ. 2,244 கோடி நன்கொடை! காங்கிரஸுக்கு ரூ. 289 கோடி!!
2023 - 24ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக ரூ. 2,244 கோடி கிடைத்துள்ளது. இது கடந்தாண்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
காங்கிரஸ் கட்சி கடந்தாண்டு ரூ. 79.9 கோடி நன்கொடையாக பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு ரூ. 288.9 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
தேர்தல் ஆண்டுகளில் அதிக நன்கொடை
இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் வெளியான அறிக்கையின்படி, பாஜகவுக்கு அதிகபட்சமாக ப்ரூடெண்ட் எலெக்ட்ரோல் டிரஸ்ட் மட்டும் ரூ. 723.6 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதே டிரஸ்ட் காங்கிரஸுக்கு ரூ. 156.4 கோடி அளித்துள்ளது. பாஜக பெறப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மற்றும் காங்கிரஸின் பாதிக்கு மேலான நன்கொடைகள் இந்த டிரஸ்ட்டிடம் இருந்து பெறப்பட்டவை ஆகும்.
மேகா என்ஜினியரிங் மற்றி இன்ஃப்ரா லிமிடெட், சீரம் நிறுவனம், ஆர்செலர் மிட்டல் குழுமம் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் ப்ரூடெண்ட்டுக்கு அதிக நன்கொடை அளித்தவர்கள்.
பொதுத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டில், பாஜகவின் நன்கொடை சுமார் 212 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பும், பாஜக ரூ. 742 கோடியும் காங்கிரஸ் ரூ. 146.8 கோடியும் நன்கொடையாக பெற்றதாக அறிவித்திருந்தன.
இந்தியாவின் 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், 2023-24ல் ரூ.3 கோடி நன்கொடைகளை பாஜக அளித்துள்ளது. பணமோசடி செய்த புகாரில் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் மார்ட்டின் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் வெளியிடப்பட்ட நன்கொடை விவரங்களில் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடைகள் குறிப்பிடப்படவில்லை. இந்த விவரங்களை வருடாந்திர தணிக்கை அறிக்கையில் அரசியல் கட்சிகள் வெளியிடும்.
இதையும் படிக்க : +8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை
பிற கட்சிகள்
ஆனால், சில கட்சிகள் ஆண்டறிக்கையிலேயே தேர்தல் நன்கொடை பத்திர நிதி விவரங்களையும் வெளியிட்டுள்ளன. தேர்தல் நன்கொடை மூலம் பாரதிய ராஷ்டிர சமிதி ரூ. 495.5 கோடி, திமுக ரூ. 60 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ. 121.5 கோடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ரூ. 11.5 கோடி பெற்றுள்ளது.
ப்ரூடெண்ட் எலெக்ட்ரோல் டிரஸ்ட் பாரதிய ராஷ்டிர சமிதிக்கு ரூ. 85 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு ரூ. 62.5 கோடி, தெலங்கு தேசத்துக்கு ரூ. 33 கோடி நன்கொடை அளித்துள்ளது. திமுகவுக்கு டிரம்ப் எலெக்ட்ரோல் டிரஸ்ட் மற்றும் ஜெயபாரத் டிரஸ்ட் ரூ. 8 கோடி அளித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் பத்திரம் அல்லாமல் ரூ. 6 கோடி நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளது. மார்ட்டினின் நிறுவனம் திரிணமூல் காங்கிரஸுக்கு அதிகளவில் நிதி அளித்துள்ளது.
கடந்தாண்டு ரூ. 37.1 கோடி நன்கொடை பெற்ற ஆம் ஆத்மி கட்சி இந்தாண்டு ரூ. 11.1 கோடி மட்டுமே பெற்றதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ. 7.6 கோடி நன்கொடை பெற்றதாகவும் அறிவித்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் எதிர்க்கட்சியான சமாஜவாதி, கடந்தாண்டு ரூ. 33 கோடி நன்கொடை பெற்ற நிலையில், இந்தாண்டு வெறும் ரூ. 46.7 லட்சம் மட்டுமே பெற்றதாக தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி ஆகியவை நன்கொடை பெறவில்லை என்று அறிவித்துள்ளன.