டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
மும்பை: 13 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர்; மனைவியுடன் கைது!
மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் வசிக்கும் 13 வயது சிறுமி திங்கள்கிழமை மாலை வீட்டில் தனது தாயாரிடம் பணம் வாங்கிக்கொண்டு, கடையில் உணவுப்பொருள் வாங்கச் சென்றார். அவர் சென்ற பிறகு நீண்ட நேரமாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது தாயார் பல இடங்களில் தேடினார். கிடைக்கவில்லை. இதனையடுத்து வேலைக்குச் சென்றிருந்த தனது கணவருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். அவரும் வந்து தேடிவிட்டு இரவில் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், சிறுமியின் வீடு இருந்த இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அச்சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில், அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட பெண்ணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இதனால் அந்த நபர் இக்கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்ததில், அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஷால் காவ்லி மீதும் 3 பாலியல் குற்ற வழக்குகள் இருக்கிறது. இதில் ஒரு மைனர் பெண்ணும் அடங்கும். இதில் விஷால் காவ்லி கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். மைனர் பெண் கொலை செய்யப்பட்ட பிறகு விஷால் காவ்லியை காணவில்லை. இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் விஷால் காவ்லிதான் சிறுமியை கொலை செய்து உடலை ஆட்டோவில் எடுத்துச்சென்று பீவாண்டி அருகில் போட்டு விட்டு வந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ''கொலையாளி விஷால் கொலை செய்துவிட்டு புல்தானாவிற்கு தப்பிச் சென்றான். அவன் அங்குள்ள சலூன் கடையில் தனது அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்காக தாடியை எடுத்துவிட்டு வெளியில் வந்தபோது அவனை கைது செய்துள்ளோம். விஷால் மைனர் பெண்ணை தனது வீட்டிற்கு கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதன் பிறகு அவள் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லிவிடுவாள் என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்துள்ளான். பின்னர் வங்கியில் வேலை செய்யும் தனது மனைவிக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அவரிடம் உடலை டிஸ்போஸ் செய்ய உதவும்படி கேட்டுக்கொண்டார். அப்படி உதவவில்லையெனில் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். விஷால் காவ்லி மூன்றாவது முறையாக சாக்ஷி காவ்லியை திருமணம் செய்திருந்தார்.
விஷால் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று போட்டுவிட்டு வரும்போது, அங்குள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்துள்ளார். பக்கத்து வீடு என்பதால் சிறுமி அடிக்கடி விஷால் காவ்லி வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் விஷால் காவ்லி மீது மானபங்க புகார் எழுந்தவுடன் சிறுமி விஷால் வீட்டிற்கு செல்வதை அவளது பெற்றோர் தடுத்தனர். ஆனால் விஷால் மனைவியுடன் சிறுமிக்கு நல்ல நட்பு இருந்தது. எனவே அடிக்கடி அங்கு செல்வதை சிறுமி வழக்கமாக கொண்டிருந்தார். வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் எப்படி சிறுமியை கடத்திச் சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்திருக்கிறோம். இதில் ஆட்டோ டிரைவருக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தனர். விஷால் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள விஷால் காவ்லிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று கோரி உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் முகத்தில் கறுப்பு துணி அணிந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.