Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் ...
தஞ்சாவூர் டு இலங்கை; கடல் வழியாக கடத்த திட்டம்.. ரூ.20 லட்சம் மதிப்பிலான கஞ்சாவுடன் சிக்கிய கும்பல்!
தஞ்சாவூர் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக புகார் எழுந்து வந்தது. போலீஸாரும் கஞ்சா கும்பலை பிடிப்பதற்கு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக ஒரு கும்பல், காரில் கஞ்சா கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நேற்று ஒரத்தநாடு போலீஸார், தென்னமநாடு பிரிவு சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்வதற்கு நிறுத்தியுள்ளனர். ஆனால், நிற்பது போல் வந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இதையடுத்து பணிலிருந்த போலீஸார், பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்குத் தகவல் கொடுக்க அவர் தலைமையில் போலீஸார் மதுக்கூர் பிரிவு சாலையில் உள்ள சோதனை சாவடியில் காரை பிடிப்பதற்கு காத்திருந்தனர்.
ஏற்கனவே காரின் நிறம், நம்பர் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்ததால் வேகமாக வந்த அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய இரண்டு பேர் போலீஸிடமிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீஸார் சோதனை செய்ததில் காருக்குள் ரூ. 20 லட்சம் மதிப்பு கொண்ட 128 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட கேரளா மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (34), திருச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் (23), லெட்சுமணன் (25), தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் (22) ஆகிய நான்கு பேரை பாப்பநாடு போலீஸார் கைதுசெய்தனர்.
கடத்தல் கும்பல் போலீசாரிடம், கேளராவில் இருந்து கஞ்சாவை வாங்கி, தஞ்சாவூர் கடற்கரை பகுதியில் மறைத்து வைத்து, பின்னர் இலங்கைக்கு கடல் வழியாக படகு மூலம் கடத்துவதற்கு எடுத்து வந்ததாக தெரிவித்தனர். தப்பியோடிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதே போல் கடந்த நவம்பர் 22ம் தேதி பேராவூரணி அருகே முடச்சிக்காட்டில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டு, தோப்பு ஒன்றில் மறைத்து வைத்திருந்த 330 கிலோ கஞ்சா மற்றும் தஞ்சாவூரில் கடந்த 18ம் தேதி 103 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து கடத்தல் கும்பலைக் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.