குஜராத்: போலி மருத்துவ மாஃபியா; 10-ம் வகுப்பு படித்துவிட்டு மக்களுக்குச் சிகிச்சை.. சிக்கிய கும்பல்!
குஜராத் மாநிலம், சூரத்தில் தகுந்த கல்வித்தகுதி இல்லாமல் மருத்துவம் பார்த்துவந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சூரத் நகரில் போலி டாக்டர்களை கட்டுப்படுத்த எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகளின் பகுதியாக இந்தக் கைது நடைபெற்றுள்ளது.
லலிதா க்ரிபா ஷங்கர் சிங் என்ற பெண் 12 வகுப்பு மட்டுமே படித்துள்ளார், பிரயக் ராமசந்திர பிரசாத் என்ற அந்த நபர் வெறும் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
சூரத் துணைக் காவல் ஆணையர் (டிசிபி) விஜய் சிங் குர்ஜார் கூறுவதன்படி குற்றவாளிகள் இருவரும் இணைந்து மருத்துவமனை நடத்தி வந்துள்ளனர். நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளை எழுதி கொடுத்துள்ளனர்.
விசாரணை நடத்தியதில் அவர்களிடம் (Fake Doctors) எவ்வித மெடிக்கல் டிகிரியும் சான்றிதழ்களும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. அவர்களது மருத்துவமனையில் இருந்த மருந்துகள் மற்றும் பிற சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.
இருவரும் எத்தனை காலமாக சூரத்தில் போலி மருத்துவம் பார்க்கின்றனர், எந்த அளவு தீவிரமான சிகிச்சைகளை அளித்துள்ளனர் என்பது குறித்து காவலர்கள் விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
உம்ரா காவல் நிலையம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இருவருக்கும் எதிராக குற்றவியல் வழக்கு பதியப்படும் எனக் கூறியிருக்கின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் குஜராத்தின் பண்டேசறா பகுதி காவலர்கள் போலி மருத்துவ கும்பலைக் கண்டறிந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போலி மருத்துவ மாஃபியாவுக்கு மூளையாக இருவர் செயல்பட்டுள்ளனர். இரண்டு தசாப்தமாக செயல்பட்டு வரும் இந்த கும்பல் மூலம் இவர்கள் இருவரும் 10 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.