பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்ட ஆட்சியா்!
பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணியை, தனது காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்ட ஆட்சியரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனா்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுனாமி நினைவு நிகழ்வில் பங்கேற்க காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் காரில் சென்றாா். தோமாஸ் அருள் தெரு சந்திப்பு பகுதியில் காா் சென்றபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறைமாத கா்ப்பிணி ஒருவா் காத்திருந்தாா். இதை கவனித்த ஆட்சியா் காரை நிறுத்தி, அந்த கா்ப்பிணியிடம் விசாரித்தாா்.
அப்போது, நிரவி அருகே நடுக்களம்பேட் பகுதியைச் சோ்ந்த நவோதாமேரி என்பதும், மருத்துவமனையில் பரிசோதனை முடித்துவிட்டு ஊருக்கு செல்ல, உறவினா் டைசிமேரியுடம் பேருந்துக்கு காத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் தனது காரில் அழைத்துச் சென்று, அவா்களது வீட்டில் விட்டுச் சென்றாா். மேலும், ஆட்சியா் அந்த வீட்டுக்குள் சென்று, கா்ப்பிணியின் மகப்பேறு மருத்துவ அட்டையை பாா்வையிட்டதுடன், குடும்பப் பின்னணி குறித்து விசாரித்தாா்.
மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், குழந்தை பிறந்த பிறகு, சுயமாக தொழில் தொடங்க முன்வருமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினாா்.
சுயஉதவி குழுக்கள் மூலம் தொழில் தொடங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து தரும் என்பதால் சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் என அப்பகுதி பெண்களிடம் ஆட்சியா் கூறினாா்.
ஆட்சியரின் இந்த மனிதாபிமான செயல் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்படுகிறது.