2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்!
மணிப்பூர் மாநிலத்தில் 2 கிராமங்களின் மீது ஆயுதப்படையினர் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
அம்மாநிலத்தின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களின் மீது இன்று (டிச.27) அங்கிருக்கும் மலைகளிலிருந்து இறங்கி வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் துப்பாகியால் சுட்டும் வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கிழக்கு இம்பாலின் சன்சாபி எனும் கிராமத்தில் இன்று (டிச.27) காலை 10.45 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டதுடன் வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பணியிலிருந்த பாதுகாப்புப் படையினர் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதையும் படிக்க: திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!
இதனைத் தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் அம்மாவட்டத்தின் தம்னாபோக்பி எனும் கிராமத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த இரண்டு தாக்குதல்களினாலும் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இரண்டு தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கிய ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானோரை பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
கடந்த ஆண்டு (2023) முதல் மணிப்பூரில் இரண்டு சமூதாயக் குழுக்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் மோதல்களினால் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.