மொராக்கோ கடல்பகுதியில் மூழ்கிய அகதிகள் படகு! 69 பேர் பலி!
மொராக்கோ கடல்பகுதியில் தற்காலிகப் படகு மூழ்கியதில் 69 அகதிகள் பலியாகினர்.
கடந்த டிச.19 அன்று ஐரோப்பிய கண்டத்திலுள்ள ஸ்பெயின் நாட்டிற்கு பயணித்த 80 பேர் கொண்ட தற்காலிகப் படகு வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் கடல்பகுதியில் மூழ்கியது.
இதில் 69 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானவர்களில் 25 பேர் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிய 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் 9 பேர் மாலி நாட்டினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஜிகாத் படைகளாலும், பிரிவினைவாத படைகளினாலும் தொடர் வன்முறைகள் நிகழ்ந்து வருவதினால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்!
இதில், மொராக்கோ நாட்டு கடற்பகுதியிலிருந்து ஸ்பெயின் நாடு வெறும் 14 கி.மீ என்பதினால் அதன் வழியாக ஏராளமான அகதிகள் தற்காலிக படகுகளை உருவாக்கி பயணித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பான கேமினாண்டோ ஃப்ரோடெராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டில் (2024) மட்டும் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்கு பயணித்த 10,400 பேர் பலியாகியுள்ளார்கள் எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் நாளொன்றுக்கு சுமார் 30 பேர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் முயற்சியில் பலியாவது குறிப்பிடத்தக்கது.