காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி!
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.
தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், இன்று(டிச. 28) காலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், சித்தராமையா, டி.கே. சிவகுமார், பூபேஷ் பாகெல், சுக்விந்தர் சிங் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மேலும் மன்மோகன் சிங்கின் மனைவி மற்றும் மகளும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்னும் சற்று நேரத்தில் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கவிருக்கிறது. ஊா்வலத்தை தொடா்ந்து யமுனை நதிக்கரையில் நிகம்போத் காட் மயானத்தில் காலை 11.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அமைதியான பிரதமரா? - மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?
முன்னதாக வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள இல்லத்தில் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, தில்லி முன்னாள் அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.