காஸா மருத்துவமனை வலுக்கட்டாயமாக மூடல்: மருத்துவப் பணியாளா்கள் கைது
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!
விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, தேமுதிகவின் அழைப்பை ஏற்று அரசியல் தலைவர்களும் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க | 2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்
விஜயகாந்தின் நினைவு நாளன்று மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடத்த தமிழக அரசிடம் தேமுதிக கோரிக்கை வைத்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை மீறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன் மற்றும் தொண்டர்கள் பலரும் பங்கேற்க பேரணி நடைபெற்றது.
பேரணி முடிந்தபின்னர் விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி!
பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு வழங்க உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் சென்னை கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.