Bigg Boss Tamil 8: ஷோவை சுற்றி வரும் முரட்டு நம்பிக்கைகள்... போட்டியாளர்களை அசைத்துப் பார்க்கிறதா?
பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அருண் உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. சில வாரங்களுக்குப் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ராணவ், ரயான், வர்ஷினி வெங்கட் உள்ளிட்ட மேலும் 6 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் நுழைந்தனர்.
மொத்தம் 24 போட்டியாளர்களில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
மிச்சமிருக்கும் 12 போட்டியாளர்களும் டைட்டிலை நோக்கிய பயணத்தில் இருக்க, நிகழ்ச்சி கடைசிக்கட்ட விறுவிறுப்புடன் போய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிக்பாஸ் தொடங்கிய நாள் தொட்டு, அந்த நிகழ்ச்சி தொடர்பாக வேடிக்கையாகப் பேசப்பட்டு வரும் சில பேச்சுகள், மற்றும் சமயங்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கூட முரட்டுத்தனமாக நம்பும் நம்பிக்கைகள் சிலவற்றைப் பார்க்கலாமா?
இவர் பிக் பாஸ் இல்ல... இலுமினாட்டிகளின் பாஸு!
தமிழில் 2017ம் ஆண்டு மத்தியில் முதல் சீசன் தொடங்கிய சில நாள்களிலேயே இந்த நிகழ்ச்சி குறித்து இப்படி ஒரு டாக் கிளம்பி விட்டது. சோஷியல் மீடியா பிரபலம் பாரிசாலன் இந்த நிகழ்ச்சி குறித்து பல புகார்களை சமூக வலைதளங்களில் வாசித்தபடியே இருந்தார். 'அந்த ஒத்தக் கண்ணு லோகோ இலுமினாட்டிகளின் சின்னம் தான். ஆளாளுக்கு முதுக்குப் பின்னால் புறம் பேசும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமிழ்நாட்டின் குடும்ப அமைப்பை சிதைக்கப் பார்க்கிறாங்க' என ரொம்பவே சீரியஸாக அப்போது விகடன் இடமே பேசியிருந்தார் பாரி.
முந்தைய ஒரு பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட ஒரு பாடகரோ 'ஒற்றைக்கண் சின்னம் கிறது நெகடிவிட்டியை விதைக்கிறதுதான்.அதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இன்னும் எளிமையாகச் சொல்லணும்னா ஒற்றைக் கண் ங்கிறதே முழுமை பெறாத அதாவது குறைபாடுதான். குறையை யார்தான் விரும்புவாங்க? அதனால்தான் அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வாங்கினவங்க கூட வெளியே வந்த பிறகு பெருசா ஜொலிக்க முடியல' என்கிறார்.
பிக்பாஸ் வீட்டின் செட் போடப்பட்டிருக்கும் சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி. மைதானம் ஒரு காலத்தில் பெரிய தீம் பார்க் இயங்கி வந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன அங்கு சுற்றிப் பார்க்க வந்திருந்த ஒரு வட இந்தியப் பெண் ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்த போது ராட்டினத்தின் கயிறு அறுந்ததால் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரை விட்டார். அப்போதிலிருந்து சில ஆண்டுகள் தடை செய்யப்பட்ட பகுதியாகப் பூட்டிக் கிடந்த ஏரியா பிறகு சினிமா, சீரியல்களின் ஷூட்டிங்கிற்காகத் திறந்து விடப்பட்டது. பல ஆண்டுகள் பாழடைந்து கிடந்த பகுதி என்பதால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாகப் பேசி வந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களில் சிலர் கூட 'சமயங்கள்ல ஒருவித திக் திக் அனுபவங்களை உணர்ந்தோம்' எனச் சொல்லியிருக்கின்றனர். இவர்களின் கூற்றுக்கு வலு சேர்ப்பது போல அவ்வப்போது நிகழ்ச்சி தொடர்புடைய இடங்களிள் ஏதாவது சம்பவங்களும் நடந்து விட 'நாங்கதான் சொன்னோம்ல' என்கிறார்கள். இந்த சீசனில் பிக்பாஸ் செட்டில் வேலை செய்த சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதும் நினைவிருக்கலாம்.
இவங்கள்ல ஒருத்தருக்குதான் டைட்டில்!
பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கி கடந்த சீசன் வரை A R M என்கிற இந்த மூன்றெழுத்தில் தொடங்கும் போட்டியாளர்கள் தான் டைட்டில் வென்று வருகிறார்கள். முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது ரித்திகா மூன்றாம் சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஐந்தாவது சீசனில் ராஜு, ஆறாவது முகமது அசீம் ஏழாவது சீசனில் அர்ச்சனா ஆகியோர் வென்றார்கள். இந்த வரிசைப்படி பார்த்தால் வரும் சீசனில் 'ஆர்' என்கிற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரே வின்னர். இந்த சீசனில் ராணவ்,, ரயான் என்கிற இருவர் மட்டுமே தற்போது அந்த எழுத்தில் இருக்கிறார்கள். எனவே இவர்களில் ஒருவருக்கே டைட்டில் என ஒரு கூட்டம் கிளப்பி விட்டபடி இருக்கிறது.
வேறு சிலரோ இந்த வரிசை அப்படியே வரணும்னு இல்ல, இந்த மூணு எழுத்துல இருக்கிறவங்கள்ல ஒருத்தர் ஜெயிக்கலாம். அப்படி பார்த்தா அருண், அன்ஷிதா, மஞ்சரி, முத்துக்குமரன் னு இன்னும் நாலு பேரும் இருக்காங்க. அதனால மொத்தத்துல இந்த ஆறு பேர்ல ஒருத்தர்தான் டைட்டில் வாங்கப் போறாங்க' என பெட் கட்டாத குறையாத அடித்துக் கூறுகிறார்கள்.
சமூக வலைதளங்களில் இப்படி வெளியாவதை போட்டியாளர்களின் ஒருவரான ராணவின் தந்தையும் லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்.
ஷோ முடிய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கிற நிலையில் இதுபோல இன்னும் என்னென்ன நம்பிக்கைகள் எல்லாம் கிளம்பக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.