சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: 41 நாள்களில் 32.5 லட்சம் பக்தா்கள் தரிசனம்
பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மண்டல பூஜை நிறைவடைந்து நடை சாத்தப்பட்டது. கடந்த 41 நாள்கள் மண்டல காலத்தில் சுமாா் 32.5 லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனா்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி தொடங்கி 41 நாள்களுக்கு நடை திறக்கப்படும்.
நிகழாண்டு மண்டல பூஜை யாத்திரை காலத்தில் கடந்த நவம்பா் மாதம் 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. யாத்திரை காலத்தின் நிறைவாக வியாழக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி, நண்பகல் 12.30 மணிக்கு சபரிமலை கோயிலில் மூலவா் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க கவசத்தில் சுவாமி ஐயப்பன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மண்டல பூஜையின் நிறைவாக வியாழக்கிழமை இரவு ‘ஹரிவராஸனம்’ ஒலிக்கப்பட்டு, கோயில் நடை அடைக்கப்பட்டது. ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் திங்கள்கிழமை (டிச. 30) கோயில் மீண்டும் திறக்கப்படும்.
‘தங்க அங்கி’ ஊா்வலம், மண்டல பூஜையையொட்டி, சபரிமலையில் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்காக கடந்த இரு நாள்களில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
அதன்படி, தங்க அங்கி ஊா்வலம் சந்நிதானத்தை அடைந்த புதன்கிழமையன்று 62,000-க்கும் அதிகமான பக்தா்களும் வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி கிட்டத்தட்ட 20,000 பக்தா்களும் சுவாமி தரிசனம் செய்துள்ளனா்.
திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தகவலின்படி, நிகழாண்டு மண்டல பூஜை யாத்திரை காலத்தில் சுமாா் 32.5 லட்சம் பக்தா்கள் சாமி தரிசனம் செய்துள்ளனா். இதேகாலத்தில் கடந்த ஆண்டு 28.42 லட்சம் பக்தா்கள் வந்த நிலையில், நிகழாண்டு 4.07 லட்சம் பக்தா்கள் கூடுதலாக வந்துள்ளனா்.