கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
திருப்பத்தூர் : வாழைத் தோப்பில் ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி; வேலைக்கு சென்ற கணவன் கொடுத்த ட்விஸ்ட்
திருப்பத்தூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 39 வயது பெண் அவர். இவரின் கணவர் கட்டட வேலைச் செய்துவருகிறார்.
இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில், மூன்றுப் பேருக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு மகள் மட்டும் மாற்றுத்திறனாளி என்பதால் பெற்றோருடனேயே தங்கியிருக்கிறார். இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் கணவனுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு வந்திருக்கிறது. கட்டட வேலைக்குச் சென்ற பிறகு மனைவி வேறு யாரையோ தனிமையில் சந்திப்பதாகவும் அவருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், மனைவியின் நடத்தையை ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார் கணவர்.
இதனிடையே, ஆசையாக வாங்கிக் கொடுத்த இரண்டரைப் பவுன் நகை மனைவியின் கழுத்தில் இல்லாததைக் கண்டும் ஆத்திரமடைந்திருக்கிறார் கணவர். இந்த சந்தேகம் தொடர்பாக சமீபத்தில் மனைவியிடம் தகராறிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இருவருக்கும் அப்போது வாக்கு வாதம் ஏற்பட்டதையடுத்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவன் மீது புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண். போலீஸார் சமரசம் செய்து இருவரையும் அனுப்பி வைத்திருக்கின்றனர். `இனிமேல் தவறுச்செய்ய மாட்டேன்’ என மனைவி உத்தரவாதம் கொடுத்ததையடுத்து அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறி அழைத்துசென்றிருக்கிறார் கணவர். இதையடுத்து, ஓசூரில் கட்டட வேலைக்காக கணவர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அங்கு இருந்து மனைவிக்குப் போன் செய்யும் போதெல்லாம் அழைப்பு பிஸியாகவே இருந்ததால் கடும் கோபமடைந்திருக்கிறார்.
மாற்றுத் திறனாளி மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஏரிக்கரைப் பகுதியிலுள்ள வாழைத்தோப்புக்குள் ரகசிய நண்பனை மீண்டும் சந்திக்கச் செல்கிறார் என்கிற தகவல் ஓசூரில் இருக்கிற கணவனுக்கு மீண்டும் தெரியவந்திருக்கிறது. மனைவியை கையும் களவுமாகப் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் சொல்லிக்கொள்ளாமல் கிராமத்துக்குத் திரும்பியிருக்கிறார் கணவர்.
அன்று இரவு வீட்டுப் பகுதியில் மறைந்து இருந்தபடியே மனைவிக்குப் போன் செய்திருக்கிறார். மனைவியின் செல்போன் வழக்கம்போல் பிஸியாகவே இருந்திருக்கிறது. தொடர் அழைப்புக்குப் பிறகு போனை எடுத்த அவரின் மனைவி வழக்கம்போல் பொய்ச் சொல்லிவிட்டு `தூங்கப் போகிறேன்’ எனக்கூறி விட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார்.
அதன் பிறகு இரவு 10.30 மணியளவில் வீட்டில் இருந்து ஏரிக்கரைப் பகுதிக்கு மனைவி தனியாக நடந்துசெல்வதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து சென்றிருக்கிறார் கணவர். அங்குள்ள வாழைத் தோப்பில் காத்திருந்த ரகசிய நண்பனுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தனிமையில் இருந்திருக்கிறார். பின்தொடர்ந்து பதுங்கிச் சென்ற கணவன் ஆத்திரத்தில் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார். தாக்குதலில் மனைவியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரின் ரகசிய நண்பன் கையில் கிடைத்த ஆடையுடன் தலைத்தெறிக்க தப்பி ஓடிவிட்டார். ஆனாலும் அவர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டார் அந்தக் கணவர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக திருப்பத்தூர் தாலுகா போலீஸார், பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.