மன்மோகன் சிங் மறைவு: ஹிமாசலில் அரசு அலுவலகங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!
`ஞானசேகரன் மீது 20 வழக்குகள்; FIR லீக் ஆனது எப்படி?' - அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கமிஷனர் விளக்கம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் (FIR) இணையத்தில் கசிந்த விவகாரம், காவல்துறை மீது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. தொடர்ந்து அரசியல் கட்சிகள், குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இவ்வழக்கு தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அருண், ``24-ம் தேதி மாலை 4 மணிக்கு அழைப்பின் அடிப்படையில் போலீஸ் குழு அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட மாணவியும், POSH கமிட்டியிலுள்ள பேராசிரியையும் அளித்த புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்தோம். பின்னர், விசாரித்து ஆதாரங்களைச் சேகரித்து 25-ம் தேதி காலையிலேயே குற்றம்சாட்டப்பட்ட நபரைப் பிடித்தோம். மேலும் விசாரித்து அவர்தான் குற்றவாளி என்று உறுதிப்படுத்தியவுடன் கைதுசெய்து காவலில் வைத்தோம்.
போக்சோ குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களில் FIR பதிவு செய்யும்போது Crime and Criminal Tracking Network & Systems (CCTNS)-ல் தானாகவே லாக் ஆகிவிடும். ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக FIR லாக் ஆவதில் தாமதமாகியிருக்கிறது. அந்த தாமதமான நேரத்தில் ஒரு சிலர் பார்த்து, பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். அவர்கள் வழியாகக் கசிந்திருக்கலாம். அதேபோல், புகார்தாரருக்கு ஒரு நகல் கொடுத்தோம். இந்த இரண்டு வழிகளில் FIR வெளியாகியிருக்கலாம். இதுபோன்ற வழக்குகளில் FIR-ஐ கசியவிடுவது குற்றம்.
இப்போது இந்த விவகாரத்தில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்துதான் கசிந்திருக்கிறது. கசியவிட்டவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்கப்படும். இதுவரை நடந்த விசாரணையில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி. மேலும், செல்போனை ஃப்லைட் மோடில் வைத்து அவர்களை மிரட்டியிருக்கிறார். 2013 முதல் ஞானசேகரன் மீது சென்னையில் 20 வழக்குகள் இருக்கிறது. இதில், 6 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகள் விசாரணையில் இருக்கிறது. கடைசியாக இவர் மீது 2019-ல் வழக்குப்பதிவாகியிருக்கிறது. அதற்குப் பிறகு இவர் மீது குற்ற வழக்கு பதிவாகவில்லை.
அனைத்தும் திருட்டு போன்ற வழக்குகள். மற்றபடி, ரவுடித்தனம் செய்ததாகவோ, பெண்களைத் துன்புறுத்தியதாகவோ இவர் மீது வழக்கு இல்லை. விசாரணையில் அப்படி ஏதும் தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி புகார் வாங்குவோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது. அதில், 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கிறது. 140 பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். இந்த மாணவி தைரியமாகப் புகாரளித்தது போல மற்றவர்கள் தைரியமாகப் புகாரளிக்க வேண்டும். குற்றவாளி எந்தக் காட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறினார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...