ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
மது அருந்தும் பாரா ஓமலூர் மார்க்கெட் வளாகம்? - சாலையில் தவிக்கும் வியாபாரிகள்; திறக்கப்படுவது எப்போ?
சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில் பல வருடங்களாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பகல் நேரத்திலேயே இங்குக் கூட்டம் அலைமோதும்... அவ்வப்போது வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள் நடக்கும். இந்த டாஸ்மாக் கடைக்கு எதிரே அரசு கட்டிக் கொடுத்த காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை.
அதன் காரணமாக வியாபாரிகள், சாலையிலேயே காய்கறிகளைப் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.
''ஏன் இப்படி நடக்கிறது... நீங்கள் ஏன் மார்க்கெட் உள்ளே சென்று வியாபாரம் செய்யாமல் சாலையில் இப்படி வெயில், மழையில் கஷ்டப்படுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, குமுறலாகக் கொட்டித் தீர்த்தார்கள் வியாபாரிகள்!
நம்மிடம் பேசியவர்கள், ``இந்த ரோட்டில் உட்கார்ந்து வியாபாரம் செய்றதுக்கு எங்களுக்கு என்ன வேண்டிக் கிடக்கு. அதை திறந்தால் அங்கே போய் உட்கார்ந்து விடலாம். வெயிலா புயலா அதைத்தான் இன்னும் திறக்கவில்லையே!
புதுசா கட்டின அந்த மார்க்கெட் குடிகார்களோட கூடாரமா மாறிக்கிடக்கு. நாங்க அப்படியே அங்க போய் வியாபாரம் பாக்கலாம்னு பார்த்தா... மது வாங்கி வந்து கூட்டமாக அங்கேயே உட்கார்ந்துட்டு தகராறு செய்வாங்க.
மதுவை வாங்கி வந்து கூட்டம் கூட்டமாக அங்கேயே உட்கார்ந்து குடித்துவிட்டுச் சண்டை செய்வார்கள். அதனால்தான் திறக்கும் வரை இங்கேயா இருக்கிறோம். நாங்கள் என்ன செய்வது... இதை கட்டி ஒரு வருடம் ஆகியும், இன்னும் திறக்கவில்லை. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் திறக்க உள்ளதாக செய்தி வந்தது, ஆனால் இன்னும் திறக்கவில்லை.
இப்போது அந்த மார்க்கெட் வளாக இடத்தையே பார்-ஆக மாற்றி எங்களுக்கும் தொந்தரவு தருகிறார்கள். பக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது, அதையும் பொருட்படுத்தாமல் அங்கேயே உட்கார்ந்து குடிக்கிறார்கள். அங்கு இரு சக்கர வாகன ஸ்டாண்டு உள்ளது. வண்டிகளை எடுத்துச் செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் அந்த வழியே செல்லும் போது முகம் சுளிக்கிறார்கள். இதனால் பலமுறை இங்கே சண்டையும் நடந்து இருக்கிறது.
இரவில் போலீஸார் இங்கு வந்து செல்வார்கள். ஆனால், அவர்களும் இங்கு மது அருந்தி, அட்டகாசம் செய்பவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கணும்" என்றனர்.
இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்தபோது, ``இந்த இடத்திலேயே குடித்துவிட்டு, வாந்தி கூட எடுத்து நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த இடத்தில்... இத்தகைய நபர்களால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மேலும், இங்கு மது அருந்துபவர்களால் இந்த இடத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இது தொடர்பாக ஓமலூர் பேரூராட்சி ஆணையரிடம் பேசியபோது, ``இந்த மார்க்கெட்டை ஏற்கெனவே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், சுற்றுலாத் துறை அமைச்சரும் திறக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், அண்மையில் திருநெல்வேலியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக அமைச்ச அங்கே சென்றுவிட்டதால், இந்த மார்க்கெட்டைத் திறப்பதற்குத் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மார்க்கெட்டின் பாதுகாப்பு கருதி வரும் 27-ம் தேதி, மார்க்கெட்டைச் சுற்றி வேலி அமைக்க டெண்டர் விடப்போகிறோம்" என்றார்.