ஸ்ரீவில்லிபுத்துார்: கடன் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி; கணவன், மனைவி கைது!
விருதுநகர் மாவட்டத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "மம்சாபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சங்கிலி (வயது 41). செண்பகத்தோப்பு சாலையில் உள்ள ஆட்டுவலசையைச் சேர்ந்தவர் சூர்யா (39). இருவரும் நண்பர்கள். ஒன்றாக விவசாய பணிகளை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டுத்தேவைக்காகவும், செலவுக்காகவும் சங்கிலியின் உறவினரிடம், சூர்யா பணத்தை கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாகியும் இந்த கடன் தொகையை சூர்யா திருப்பி தரவில்லை.
இதனால் கோபமடைந்த சங்கிலியின் உறவினர், சங்கிலியை அழைத்துக்கொண்டு சூர்யாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் குறுக்கிட்ட சூர்யாவின் மனைவி தவசியம்மாள்(34), வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளில் ஒன்றை எடுத்து சூரியாவிடம் கொடுத்து, 'அவர்கள் மீது வீசுங்கள் செத்து தொலையட்டும்' எனக் கூறியதாக கூறப்படுகிறது. இந்த மிரட்டலால் பயந்துபோன சங்கிலியும், அவரின் உறவினரும் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலையத்தில், நாட்டு வெடிகுண்டு வீசி தங்களை கொலை செய்ய முயன்றதாக புகார் கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் காட்டுக்குள், மான், காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடுவதற்காக வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக சூர்யா-தவசியம்மாள் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். மேலும், வெடிகுண்டுகளை மம்சாபுரத்தைச் சேர்ந்தவரிடம் வாங்கியதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீஸார், சூர்யா -தவசியம்மாள் இருவரையும் கைது செய்தனர். அதுபோல் கடன் பிரச்னையில் வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியதாக சூர்யா அளித்த புகாரின்பேரின் சங்கிலி மற்றும் அவரின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" எனக் கூறினர்.