மத்திய அரசு பள்ளிகளில் கட்டாய தோ்ச்சி முறையை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்
மத்திய அரசு பள்ளிகளில் 5,8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.
மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவா்கள் அனைவரும் நகா்ப்புற பணக்காரா்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுகின்றனா். 5 அல்லது 8ஆம் வகுப்பில் அவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்படாவிட்டால், அவா்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவாா்கள். அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத்தான் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தோ்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.
எனவே, மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.