சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகளுக்கு மரண தண்டனை உறுதி! டிரம்ப்
அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் அபார வெற்றி பெற்றார். வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பைடன் வெளியிட்ட அறிக்கையில், “குற்றவாளிகளின் செயல்களை வன்மையாக கண்டிக்கின்றேன். இவர்களின் செயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்பதில் முன்னெப்போதையும்விட நான் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : லாட்டரி, மது விற்பனை மூலம் கேரள அரசுக்கு 25% வருமானம்!
இந்த நிலையில், ஜோ பைடனின் முடிவை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த டிரம்ப்,
”மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை ஜோ பைடன் குறைத்துள்ளார். அவர்கள் ஒவ்வொருவரின் செயல்களை கேட்டால், அவர் இதைச் செய்தார் என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
அமெரிக்க குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகள் மற்றும் அரக்கர்களுக்கு மரண தண்டனையை தீவிரமாக மேற்கொள்ள நீதித்துறைக்கு உத்தரவிடுவேன்.
சட்டம் மற்றும் ஒழுங்குள்ள நாடாக அமெரிக்காவை மீண்டும் மாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று மற்றொரு பதிவில், டிரம்ப் பதவியேற்றவுடன், அமெரிக்க குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை "வன்முறை கற்பழிப்பவர்கள், கொலைகாரர்கள் மற்றும் அரக்கர்களிடமிருந்து" பாதுகாக்க "மரண தண்டனையை தீவிரமாக தொடர" நீதித்துறைக்கு உத்தரவிடுவேன் என்று கூறினார்.
சிறையில் சக கைதிகளைக் கொன்ற 9 பேர், வங்கிக் கொள்ளையின் போது கொலை செய்த 4 பேர், சிறைக் காவலரைக் கொன்ற ஒருவர் உள்ளிட்டோருக்கு மரண தண்டனையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.