அமித் ஷாவுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு!
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (டிச. 25) சந்தித்தார். அவருடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவும் உடன் இருந்தார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அமித் ஷாவுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசையும் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.
முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடினர். முன்னாள் பிரதமர் வாஜபேயி பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா பட்டேல், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி, ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜித்தன் ராம் மாஞ்சி, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
இதில், வாஜபேயி ஆட்சிக் காலத்தில் நல்லாட்சிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ஆட்சி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தின் எதிரே தீக்குளித்து தற்கொலை முயற்சி!