“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்”- லூயிஸ் மிஷாவ்|ஒரு புத்தகக் கடைக்க...
வாஜ்பாயின் கனவுகளை முன்னெடுக்கிறார் பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்
வாஜ்பாய் கண்ட கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லக்னெளவில் புதன்கிழமை நடைபெற்ற வாஜ்பாய் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்தல், குடிமக்களின் பாதுகாப்பு, அவர்களின் கருத்துரிமையை உறுதி செய்தல் ஆகியவையே நல்லாட்சிக்கு உதாரணங்களாகும்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடர் பிகாரி வாஜ்பாய் கண்ட கனவை இப்போது பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துச் செல்கிறார். வாஜ்பாயின் நல்லாட்சி இந்த நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதம் அதிகரித்தது. சுதந்திர இந்தியாவில் இது வரலாற்று சாதனையாகும். அவரது ஆட்சி உலக நாடுகளிடையே பாராட்டை பெற்றது.
பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அந்தியோதயா திட்டங்கள் நாட்டில் கிராம மக்கள், ஏழைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தன. வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் நகரங்களை மட்டும் சாலைகளால் இணைக்காமல் கிராமப் புறங்களிலும் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டு நகரங்களுடன் இணைக்கப்பட்டன. அதுபோல தொலைத்தொடர்பு துறையில் அனைவரின் கைகளிலும் கைப்பேசிகள் இருக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றினார். அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் தொழில் செய்வதற்கான வழிகளை எளிதாக்கினார். தேவையற்ற 1,500 சட்டங்களை அகற்றி எளிதாக தொழில் செய்யும் நாடுகளில் 50-ஆவது இடத்துக்கு இந்தியாவைக் கொண்டுவந்தார். விரைவில் முதல் 20 இடங்களுக்குள் இந்தியா வந்துவிடும்.
பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டம் வெற்றியடைந்துள்ளது. மறைந்த முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி கூறுகையில், "பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 100 பைசா செலுத்தினால் அதில் 14 பைசா மட்டுமே அவர்களைச் சென்றடைகிறது' என்றார்.
மக்களுக்கான பணத்தில் நடைபெற்றுவந்த ஊழலை பிரதமர் மோடி முடிவுக்குக் கொண்டு வந்தார். வாஜ்பாய்க்கு எதிராகவோ அல்லது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவோ எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டம்}ஒழுங்கு பராமரிக்கப்படுவதுடன் பல்வேறு நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட உத்தரபிரதேசம் முதலிடம் வகிக்கிறது. 4 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் கான்கிரீட் வீடுகள் பெற்றுள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பெண் பயனாளிகள் ஆவர்.
உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு முன்னேற்றமடைந்துள்ளது. 4 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறியுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழைகள் ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.
நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.