தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள்!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் தயாரிப்பாளருமான தில் ராஜு, இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, நடிகர்கள் நாகர்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா. நல்லகண்ணு பெயர்!
ஹைதராபாத் திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு திரையிடலின்போது, முன்அனுமதியின்றி படத்தின் நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் திரையரங்குக்கு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவரின் மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த தெலங்கானா காவல்துறை, நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்க உரிமையாளர் உள்ளிட்டோரை கைது செய்து நடவடிக்கை எடுத்தது.
மேலும், தெலங்கானாவில் சிறப்புக் காட்சிகள், அதிகாலை காட்சிகள் போன்றவைக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து மாநில அரசு உத்தரவிட்டது.
அரசுக்கும் திரைத்துறையினருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, தெலங்கானா நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் முதல்வரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின்போது பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, ”சட்டம் - ஒழுங்கு விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது, தெலுங்கு திரையுலகுக்கு அரசு துணை நிற்கும்” எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.