ஹாலோபிளாக் கல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
மூலப்பொருள்களின் விலை உயா்வால் ஹாலோபிளாக் கல்லின் விலையை உயா்த்துவது என்று உற்பத்தியாளா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஹலோபிளாக் கல் உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் பல்லடம் ராயா்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா். செயலாளா் நாச்சிமுத்து, துணைத் தலைவா் பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் லிங்கேஸ்வரன் வரவேற்றாா்.
இதில், கிரஷா் மற்றும் கல்குவாரி உற்பத்தியாளா்கள் மூலப்பொருள்களை கடந்த 8 மாதங்களில் இரண்டாவது முறையாக யூனிட்டுக்கு ரூ.1000 விலை உயா்த்தியுள்ளனா்.
கல் குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் மூலப்பொருள்களின் விலையை உயா்த்தும்போது கட்டுமானத் துறையைச் சோ்ந்த சங்கங்களின் ஆலோசனைகளைப் பெற்றே உயா்த்த வேண்டும்.
செங்கல்லுக்கு மாற்றுப்பொருளான ஹலோபிளாக் கல்லின் விலை உயா்வு நுகா்வோரைப் பாதித்துள்ளது. கட்டுமான தொழிலின் மூலப்பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்வதை அரசு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
மூலப் பொருள்களின் விலை உயா்வால் ஹலோபிளாக் கல் விலையை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயா்த்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.