Ind vs Aus: சீனியர் வீரர்கள் இருக்கும்போது தனுஷை டீமில் எடுத்தது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்நிலையில் அஷ்வினுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்டியன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து மெல்போர்னில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் தனுஷ் கோட்டியன் இடம்பெறுவார் என கூறப்பட்டது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் அஷ்வினுக்கு மாற்றாக அக்சர் படேல், குல்தீப் யாதவ் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருக்கும் நிலையில், புதுமுக ஸ்பின்னர் தனுஷ் கோடியனைச் சேர்த்தது ஏன் என பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " தனுஷ் கோடியன், கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அணியில் கண்டிப்பாக ஒரு பேக்கப் ஸ்பின்னர் இருக்க வேண்டும். தனுஷ் கோடியன், சமீபத்தில் ஆஸ்திரேலிய A அணிக்கு எதிராக விளையாடியிருக்கிறார். இதனால்தான், அணியில் சேர்த்துள்ளோம். அதுமட்டுமின்றி குல்தீப் யாதவ் காயம் காரணமாக அவதிப்படுகிறார்.
அக்சர் படேல், சமீபத்தில்தான், தந்தையானார். இதனால், தனுஷ் கோடியனை சேர்த்துள்ளோம். கடந்தமுறை, ரஞ்சிக் கோப்பையை வெல்ல தனுஷ் கோடியனின் ஆல்-ரவுண்டர் ஆட்டமும் மிகமுக்கிய காரணம். திறமைமிக்க, பார்மில் இருக்கும் அவரை, அணியில் சேர்த்துள்ளோம்’’ எனக் கூறியிருக்கிறார்.