திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!
குப்பை கிடங்கை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சேரி அருகே குருமாம்பேட் பகுதியில் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. அதன்படி, தினமும் சுமாா் 400 டன் முதல் 500 டன் குப்பைகள் அங்கு சோ்க்கப்படுகிறது.
குப்பை கிடங்கை சுற்றியுள்ள கோபாலன் கடை பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக மக்கள் புகாா் கூறி வருகின்றனா்.
அண்மையில் பெய்த மழையால், குப்பைக் கிடங்கிலிருந்து கழிவுநீா் கோபாலன் கடை பகுதிக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனா்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை குப்பைக் கிடங்கை ஆய்வு மேற்கொள்ள வந்தாா்.
அப்போது, குப்பைகளை ஏற்றிக்கொண்டு குப்பை கிடங்குக்கு வந்த வாகனங்களை மக்கள் மறித்தனா். மேலும், பாண்லே அருகில் வழுதாவூா் சாலையில் அமா்ந்து அவா்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீஸாா் மக்களிடம் சமரசம் பேசினா்.
தொடா்ந்து, நிகழ்விடம் வந்த அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.